செய்திகள்

வி.ஐ.டி சென்னையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி

சென்னை, மே 18–

கோடைக்கால விடுமுறையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வி.ஐ.டி சென்னையின் கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் அட்வான்ஸ் சயின்ஸ் துறை ஆகியவை இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கும் இலவச முகாமினை நடத்தியது.

இம்முகாமில் ரத்னமங்கலம், மேலக்கோட்டையூர் அரசு உயர்நிலை பள்ளிகள், மாம்பாக்கம், கண்டிகை, ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி, கீரப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை தயாரிப்பது மற்றும் இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு உணவு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வி.ஐ.டி சென்னையின் நிதி உதவியின் கீழ் வழங்கப்பட்டு நடைபெற்ற இப்பயிற்சி நிறைவடைந்தது.

இப்பயிற்சியின் நிறைவு விழாவில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் பங்கேற்று சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில், கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையின் டீன் இரா.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமினை விஐடி சென்னையின் பேராசிரியர்கள் வ.அருண்குமார், த.சத்தியன், வெ.வாசுகி, வி.வித்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *