செய்திகள் போஸ்டர் செய்தி

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்

தூத்துக்குடி அருகே

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்

எடப்பாடி பழனிசாமி உத்தரவு

 

சென்னை, ஜூலை 3–

தூத்துக்குடி அருகே விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் 2.7.2020 அன்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தலா ரூ.10 லட்சம்

இச்சம்பவத்தில் உயிரிழந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தினேஷ் ஆகிய நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஒவ்வொருவராக பலி

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). இவருடைய வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகனத்துடன் 4 தொழிலாளர்கள் வந்தனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை முதலில் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்தனர்.

தண்ணீர் முழுவதும் எடுக்கப்பட்ட பிறகு தொட்டியின் அடியில் படிந்து இருந்த கழிவுகளை அகற்றுவதற்காக தொட்டியின் மேல் உள்ள சிறிய பாதை மூலம் இசக்கிராஜா, தினேஷ் ஆகியோர் உள்ளே இறங்கினார்கள். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார்கள். இதை பார்த்து தொட்டியின் மேல் நின்ற பாலகிருஷ்ணன், அவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதை கவனித்த பாண்டி 3 பேரையும் காப்பாற்றுவதற்கு உள்ளே இறங்கினார். ஆனால் அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 4 பேருமே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *