அதிகாலையில் நடைபயிற்சி, சூரிய நமஸ்காரம் செய்தார்
கன்னியாகுமரி, ஜூன்.1-
விவேகானந்தர் மண்டபத்தில் 3-வது நாளாக பிரதமர் மோடி இன்றும் தியானம் செய்தார். சூரிய வழிபாடு நடத்தி, சிறிது நடைபயிற்சியும் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய அவர் அதிகாலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்திலேயே இருந்தார். தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.
பிரதமர் மோடி நேற்று அதிகாலை சூரிய வழிபாடு செய்த பின்னர் ஸ்ரீ பாதம் மண்டபத்திலும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார். அதை தொடர்ந்து காலை 7.25 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்துக்குள் சென்று 2-வது நாள் தியானத்தை தொடர்ந்தார். அங்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், கமாண்டோ படையினர், தமிழக போலீசார், துணை ராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று குமரி மாவட்ட கடல் பகுதியை அடிக்கடி சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று 3வது நாளாக பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். காலை 5.50 மணி அளவில் தனது அறையில் இருந்து காவி உடையிலேயே மோடி வெளியில் வந்தார். இன்றும் சூரிய உதயத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார். பின்னர் கமண்டலத்தில் இருந்த புனித நீரையும் கடலில் ஊற்றினார்.
நடைபயிற்சி
பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்து கடல் அழகை ரசித்து பார்த்த அவர் அங்கிருந்த படிகளின் மேல் ஏறி இறங்கி சிறிய அளவிலான நடைபயிற்சியையும் மேற்கொண்டார்.
இன்றைய தியானத்தை காலை 7.30 மணி அளவில் தொடங்கிய பிரதமர் மோடி
மதியம் 1.45 மணிக்கு தியானத்தை நிறைவு செய்கிறார். திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்கிய பின், விருந்தினர் மாளிகைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலை மற்றும் காந்தி மண்டபத் துக்கும் சென்று பார்வையிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.கனனியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி உணவு வகைகள் எதையும் சாப்பிடவில்லை. இளநீர், மோர் மற்றும் குறைவான அளவில் உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டார். அதே நேரத்தில் யாரிடமும் அவர் பேசாமல் மவுன விரதமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகளுக்கு
தடை
இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு சென்ற படகு திரும்பி வந்த பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.