செய்திகள்

விவாகரத்து வழக்கு: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

Makkal Kural Official

27–ந் தேதி தீர்ப்பு

சென்னை, நவ. 21–

விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ்- – ஐஸ்வர்யா இடையேயான பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட்டு, தனுஷ்- – ஐஸ்வர்யாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மனு நீதிபதி சுபாதேவி முன்னிலையில் கடந்த 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை இன்று தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜரானார். அப்போது தனுஷ் வந்து கொண்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்த நிலையில் விசாரணையை 12 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி, 27–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *