சிறுகதை

விவரமான விவசாயிகள்! | * டிக்ரோஸ் *

இரண்டு வாரத்தில் திருமணம். ரேகா மனதில் இனம்புரியாத பயம். பரிதவிப்பு. அவ்வப்போது கண்ணாடியைப் பார்த்த வண்ணம் வீட்டிற்குள் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தாள்.

உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையே என்ற கவலை அன்று வந்தது. ஒரு அக்காவோ தங்கையோ இருந்தால் தனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்து இருப்பார்களே!

அன்று 1303–வது முறையாக கண்ணாடி பார்த்த போதும் ‘அட ரேகாவே கறுப்பாயிருக்கியே!’ என சிணுங்கினாள்.

பெற்றோர்கள் தமிழரசனும் பச்சைக்கிளியும் நகரத்துக்குச் சென்று திருமண பொருட்கள் வாங்கச் சென்றிருந்ததால் இப்படி தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது வீட்டின் முன்பு ஒரு பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. கூரை வீடுதான், ஆனால் முன்புறம் மிக விசாலமான தோட்டம் உண்டு, ஒரு பக்கம் கோழிகள் கொட்டகை, பிறகு வரிசை, வரிசையாய் பூச்செடி கன்றுகள், அவையெல்­லாம் விற்பனைக்கு தான். நடுவே வரப்பும் அதில் நீர் பாய்ச்சலும் நடப்பதால் பச்சை பசேலென காய்கறிகள் தோட்டம்.

பள்ளிப்பருவம் முதலே இதையெல்லாம் ஆசை ஆசையாக கடந்துதான் பள்ளிக்கூடம் செல்வாள். சைக்கிள் வாங்கிய பிறகும் வீட்டிலிருந்து தோட்ட எல்லை கதவு வரை தள்ளியே நடந்து செல்வது தான் வாடிக்கை, காரணம் செடிகளை நாசப்படுத்தி விடக்கூடாது என்பதுதான்.

செடிகளையும் மலர்ந்த பூக்களையும் அங்கே தவழும் ஈர மண்ணின் மணத்தையும் அனுபவித்தபடி தான் வெளியே புறப்படுவாள்.

பிறகு பி.ஏ. பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்ற நாட்களில் கடும் தூரம் செல்ல வேண்டியது இருந்ததால் பிரதான சாலையை சைக்கிளில் கடக்க சிரமமாக இருந்ததால் கல்லூரிக்கு நடந்தே தான் போய் வருவாள்.

ஆனால் சைக்கிளுக்கு வாரவாரம் எண்ணைக் குளியல் செய்து அவ்வப்போது அப்பா தமிழரசனுடன் அக்கம் பக்கம் செல்லும் போதெல்லாம் சைக்கிளில் தான் செல்வதால், அந்த சைக்கிள் ‘மக்கர்’ பண்ணாமல் சுழன்று கொண்டே இருந்தது.

பைக் நின்ற சத்தம் கேட்டு கதவிடுக்கில் பார்க்கும் முன்பே தானாகவே வந்து ரேகாவுடன் ஒட்டிக்கொண்ட நாய் குரைப்பது கேட்டது. அதில் கோபமில்லை. மாறாக வரவேற்பு தாண்டவமாடியது!

இந்த நேரத்துக்கு யாரு? என்ற குழப்பத்துடன் கதவை திறந்து பார்க்க, அங்கே மாறன் பைக்கை விட்டு கீழே இறங்கியபடி, தன் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான்.

அட, மாறனுக்கு இங்கு என்ன வேலை? இப்படி யாரும் இல்லாத நேரத்திலே வெயிலில் வேர்க்க விறுவிறுக்க வர அப்படி என்ன அவசரம்?

பைக்கை வெளியே விட்டுவிட்டு கதவை திறந்து நடந்து வருவதைக் கண்ட ரேகாவிற்கு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கி எழுந்தது.

விரைவில் தாலி கட்ட இருப்பவன் கண்ணெதிரே தோன்றினால் வரும் மகிழ்ச்சி என்பது மட்டுமா? தன் சொல்லுக்கு மதிப்பு தந்தது தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மாறனின் அப்பா கந்தனும் வயலில் தன் வேர்வை சிந்தி, அதில் வரும் வருமானத்தில் மனைவி பிரேமலதாவுக்கும் மகன் மாறனின் செலவுக்கும் நிறையவே சம்பாதித்து வருபவர்.

ஒரே பையன் என்பதால் எதைக்கேட்டாலும் வாங்கி தந்து விடுவார்.

லதாவை கைப்பிடித்த நாள் முதல் அவளது தேவைகளுக்கு முதல் செலவு என்று வாழத் துவங்கினான். மேலும் குடும்ப பொறுப்பையும் முழுமையாக அவனிடம் ஒப்படைத்து விட்டதால் சம்பாதித்த பணத்தை அப்படியே அவளிடம் தந்து விட்டு தன் செலவுக்கு என அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக்கொள்வான்.

லதாவின் காதிலும் கழுத்திலும் மின்னிய தங்க வைர ஆபரணங்களை போல் இரண்டு மடங்கு வங்கி லாக்கரில் பத்திரமாகவே இருப்பதும் அதை எல்லாம் வர இருக்கும் மருமகளுக்கு போட்டு அழகு பார்க்கவே என காத்திருப்பதும் ஊரில் யாருக்கும் தெரியாதது.

மாறனும் புது பைக் – செல்போன் சகிதம் பிஎஸ்சி அக்ரி படிப்பை முடித்துவிட்டு அப்பாவுடன் விவசாயத்தில் மூழ்கிவிட்டான்.

இரு வீட்டிலும் திருமண பேச்சு வந்தபோது தூரத்து சொந்தம் என்பதாலும் இருவருமே சம அளவு படித்தவர்கள் என்பதாலும் சட்டுப்புட்டென்று பூர்வாங்க பேச்சுக்கள் முடிந்து, நிச்சயதார்த்தம் வரை ‘கிடுகிடு’ என வந்துவிட்டது.

சொந்தக்காரர்கள் என்ற முறையில் முன்பே மாறன் ரேகாவின் அப்பாவை பலமுறை பார்க்க வீட்டுக்கு வந்தவன் தான். முதல் முறையாக பைக் வாங்கியவுடன், வீட்டிற்கு வந்து தமிழரசனையும் பச்சைக்கிளியையும் வணங்கி, தன் புது பைக் பற்றிய மகிமைகளை பேசி விட்டே சென்றான்.

கல்லூரியில் சேர்ந்து இருந்த ஆரம்பத்தில், சைக்கிளில் சென்று வருவதால், மெல்ல தன் வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்தபடி மெல்ல சைக்கிளை தள்ளியபடி நுழைந்து கொண்டு கொண்டிருந்தாள்.

அதே நேரம்…, அந்த குறுகிய பாதையில் பைக்கில் வெளியே வரும் மாறன் பைக்கை அதே நேர்பாதையில் சென்றால் ரேகாவுடன் மோத வேண்டுமே என்ற பயத்தில் பைக்கை லாவகமாக வரப்பில் ஏற்றி, சில கன்றுகள், பூஞ்செடிகள் சிதைபட்டது. ஆனால் படுஸ்டைலாக மீண்டும் பைக்கை பாதைக்கே கொண்டு வந்து விட்டு, கேட்டை விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ‘விருட்’ என்று வெளியேறினான்.

திரும்பி பார்த்து இருந்தால் செடிகளை கொதறி விட்டு சென்றதை தாங்கிக்கொள்ளாமல் ரேகா பொறுமியபடி தன்னை சுட்டெரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இருப்பான்!

ஆனால் அவனோ தனது நண்பர்களை சந்திக்க ‘பைக்’கை டாப் கியரில் செலுத்தி வேகமாக சென்று கொண்டிருந்தான்.

அந்த ஆண்டு தீபாவளி நாளில் பலகாரம் தர வந்தபோது, மாறனை நுழைவாயில் சந்திக்க நேர்ந்ததால், ‘மாமா’ என முறை சொல்லி கூப்பிட்டு, ‘கொஞ்சம் பைக்கை வெளியே நிறுத்திவிட்டு, நடந்தே போகலாமே’ என மிக பவ்வியமாக கேட்டபோது அந்தக் கொஞ்சல் வேண்டுதல், அவனது ரத்த ஓட்டத்தை பாதித்தது, நெஞ்சை ‘படக் படக்’ என்று அடிக்க வைத்தது.

‘சரி ரேகா’ என கூறியபடியே பைக்கை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே இருந்த அம்மாவிடம் தந்த போது, ‘மாறா உங்க பலகாரங்கள் நல்லாயிருக்கு’ என்று கூறி பாராட்டினாள்.

பிறகு படிப்பு காரணமாகவோ அல்லது ஊர் சுற்ற வேண்டிய காரணங்களாலோ, மாறன் இவர்கள் வீட்டிற்கு வரவே இல்லை. ஆனால் மாறனின் அம்மா பிரேமலதா பலமுறை வந்து போவது வாடிக்கை. அப்போதும் இறக்கி விட்டு செல்லக்கூட மாறன் வந்ததே இல்லை.

திருமண நிச்சயதார்த்த நாளில் மாறன் குடும்பத்தாரும் சுற்றமும் நட்பும் படைசூழ கார், வேன் பிடித்து தான் வந்து இறங்கினர். கையில் பழ தட்டுகளை ஏந்தி அந்தப் பாதையில் நடந்தே தான் வந்தனர்.

ஜன்னல் வழியாக அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ரேகாவுக்கு தங்கள் தோட்டம் மேலும் மெருகேறி, வந்தவர்களை வரவேற்பது போலிருந்தது. வந்தவர்கள் எல்லோரும் விவசாயக் குடும்பத்தினர்கள் என்பதால் மரச்செடி, கொடிகளும் கொள்ளைப்புற மாடும் ஆங்காங்கே தாவி விளையாடிக் கொண்டிருந்த கோழிகளும் மர நிழலில் ஒதுங்கி இருந்த அணில்களும் கலர்கலர் பறவைகளும் அவர்களுக்கு புதிதாக தெரியவில்லை. எல்லாம் மிகவும் பரிச்சயமானவை தான்!

அந்த மன நிலையில் தான் அன்றைய சம்பந்தப் பேச்சும் தட்டு மாற்றும் வைபவமும் இனிதே முடிந்தது! ‘மாப்பிள்ளைக்கு உங்ககிட்ட ஏதோ பேசணுமா’ என அம்மா சொன்ன போது ரேகாவுக்கு பேச்சு வராமல் மூச்சு முட்டியது!

பிறகு பின்வெளியில், அந்த ரம்மியமான மாலைப் பொழுதில் அங்கே இருந்த கிணற்றின் சுவற்றில் இருவரும் அமர்ந்து பாரதிராஜா பட கதாநாயகன், கதாநாயகியாக மாறினர்.

அவர்கள் பேச்சில் காதல் ஏதும் இல்லை. ஆனால் வருங்காலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொண்டனர்.

இவருக்கும் விவசாய பண்ணை அமைத்து பிரமாதமான விளைச்சல் பெறுவதில் ஆர்வம் இருந்தது, நிறைய கோழிகள் வளர்ப்பதிலும் பூஞ்செடிகள் விற்பனை செய்வதிலும் நோக்கம் இருந்தது.

பிறகு ஒருமுறை வீடு தேடி தன்னை பார்க்க வந்த மாறனுடன் அருகே இருந்த கோயிலுக்கும் சென்று திரும்பும் போது தான், மாறன் ஒரு யோசனையை தந்தான்.

‘உங்க வீட்டுத் தோட்டத்தின் முன் பகுதியில் தான் புதிய நெடுஞ்சாலை வரப்போகுது , தெரியுமா?’ எனக் கேட்டான்.

தெரியும் என கூறியவுடன், ‘நாம பெரிய டீ ஸ்டால், மரக்கன்றுகள் விற்பனை நிலையம் என எல்லாம் அங்கே வைத்தால் சாலையில் போகும் பலர் காரை நிறுத்தி நமது காப்பி, டீயை சாப்பிட்டுவிட்டு, மரக்கன்றுகள், பூஞ்செடிகளையும் வாங்கி செல்வார்களே…’ என அவன் தந்த யோசனைக்கு கூடுதலாக ‘மாலை நேரத்தில் வாழைக்காய், உருளை, மிளகாய் பஜ்ஜியும் சுடச்சுட விற்கலாமே…’ என கூற, ‘நீ சரியான உணவு பிரியையா?’ என கேட்டபடி புன்னகைத்தான்.

‘திருமணத்திற்குப் பிறகு சைக்கிளில் நீயே இங்கு வந்து மாலை நேரத்தில் ‘பஜ்ஜி சுடலாம். நான் காலையில் கடையைத் திறந்து வைத்துவிட்டு உன் பெற்றோர்கள் கடையை பார்த்துக்க வந்தவுடன் வீடு திரும்பி விடுகிறேன்’ என்று கூறினான்.

‘பிறகு எங்க தோட்ட வேலைக்கு அப்பாவுக்கு உதவிக்கும் போய் விடுகிறேன். இரவு வருமுன் விரைவாகவே கடைக்கும் வந்து விடுகிறேன். இரவு வியாபாரத்தை பொறுத்து கடையை எத்தனை மணிக்கு மூடுவது என யோசிப்போம்’ என்று கூற ரேகாவுக்கு ‘அடப்பாவி குழந்தையைப் பெற்றுக்கொள்வது, அவர்களை பள்ளிக்கு அனுப்புவது பற்றியெல்லாம் யோசனையே கிடையாதோ!’ என மனம் யோசித்தது.

மாறன் அன்று ரேகாவை பார்த்து இதுபற்றி தான் பேச வந்து கொண்டிருந்தான். கடைக்கு பெயர் மாறன் ரேகா என்றும் அதன் வரைபடத்தை தயாரித்து இருந்ததை காட்டவும் குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகு இப்படித்தானா கொஞ்சுவது? என்ற ஒத்திகை பார்க்கவும் தான்!

––––––––––

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *