நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
திருவாரூர், ஏப். 28–
திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத கலெக்டர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இணைந்து விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, வேளுர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமார் தனக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2020-2021-ம் ஆண்டில் நெல் விதைப்பு செய்துள்ளார். அது மட்டுமின்றி கிராம
நிர்வாக அலுவலரால் சான்று வழங்கப்பட்டு 1-ம் மணலி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.1.170 ஐ பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்தியுள்ளார்.
இழப்பீடு நிதி ரூ.28,390
இந்நிலையில் மழை வெள்ளத்தால் செந்தில்குமார் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால் அறிவிக்கப்பட்ட காப்பீடு தொகை செந்தில்குமாருக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் நேரில் அணுகி கேட்ட போது பெயர் விடுபட்டுள்ளதாகவும், விடுபட்ட பயளானிகளின் பட்டியல் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து செந்தில்குமாரின் வழக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜனவரி 31 ஆம் தேதி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர், திருத்துறைப்பூண்டி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர், இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவன பொதுமேலாளர், திருவாரூர் கலெக்டர் ஆகியோர் இணைந்தோ
அல்லது தனித் தனியாகவோ செந்தில்குமாருக்கு கிடைக்கக்கூடிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை ரூ.20,890/-யையும், ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ரூ.5,000/-த்தை இழப்பீடாகவும், வழக்கு செலவு தொகையாக ரூ.2,500/-யையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.