செய்திகள்

விவசாயிகள் பிரச்சினை : மோடிக்கு தெலுங்கானா முதலமைச்சர் எச்சரிக்கை

டெல்லி, ஏப். 12–

தெலுங்கானாவில் உற்பத்தி செய்யும் 15 லட்சம் டன் நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்படும் 15 லட்சம் டன் நெல் முழுவதையும் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) பஞ்சாப் மாநிலத்தைப் போல கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தெலங்கானா அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இதன் அடிப்படையில், டெல்லியில் அமைந்துள்ள தெலுங்கானா பவனில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசும்போது:–

“தெலுங்கானா விவசாயிகளுக்காக நாங்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கிறோம். தெலுங்கானாவில் நெற்பயிர் அபரிமிதமாக உற்பத்தியாகிறது. அவற்றைக் கொள்முதல் செய்வது குறித்த கோரிக்கைக்காக எங்களது அமைச்சர்கள் ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தபோது, அவரது பேச்சு தொனியே ஏளனமாகவும் அவமதிக்கும் வகையிலும் இருந்தது.

டெல்லி வருவோம்

பியூஸ் கோயலுக்கு எங்கள் அமைச்சர்களை அவமரியாதை செய்யும் தைரியம் எங்கிருந்து வந்தது? எல்லோரும் எப்போதும் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தெலுங்கானா விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாங்கள் டெல்லி வந்து இருக்கிறோம். இனி மீண்டும் மீண்டும் டெல்லி வருவோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் டெல்லி வருவோம்.

பிரதமர் மோடிக்கும் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கும் 24 மணி நேரம் கெடு விதிக்கிறேன். அதற்குள் தெலுங்கானா விவசாயிகளின் பிரச்சினைக்கு முடிவு கட்டுங்கள். இல்லையென்றால் இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.