செய்திகள்

விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அண்ணா தி.மு.க. முதல் குரல் எழுப்பும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் ஸ்டாலின்

குறிஞ்சிப்பாடி, மார்ச் 20–

விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அண்ணா தி.மு.க. தான் முதலில் குரல் கொடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19–ந் தேதி) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–-

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியிலே கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள். செல்வி ராமஜெயம் நன்கு அறிமுகமானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். இங்குள்ள அனைவரும் இயன்ற அளவு தேர்தல் பணி ஆற்றி, சகோதரி செல்வி ராமஜெயத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஸ்டாலினுக்கு என்னைப் பற்றி 24 மணி நேரமும் அவதூறு பேசுவதுதான் அவரது வேலை. அவரிடம் விஷயம் இல்லை. என்னைப் பற்றி பேசுவதுதான் வேலை. அரசாங்கத்தைப் பற்றி பேசுவதற்கு எந்த வித முகாந்தரமும் அவரிடம் இல்லை. அதனால் தான் எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு ஸ்டாலின் வேளாண் சட்டம் பற்றி பேசி வருகிறார். வேளாண் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தினால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக அதனை எதிர்த்து குரல் கொடுப்போம். ஆனால், அங்கு வடமாநிலத்தில் இடைத்தரகர்களால் விவசாயிகள் தூண்டி விடப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை சொல்லத்தெரியவில்லை அவருக்கு.

எது சரி?

வேளாண் சட்டத்தின் படி உதராணத்திற்கு கூறுகின்றேன் நாம் தக்காளி பயிரிடும் போது சந்தையில் விலை ரூ.40 இருக்கும். அதை அறுவடை செய்யும் போது சந்தையில் ரூ.2, ரூ.3 க்கு விற்கப்படும். அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடும் போதே, சந்தை விலைக்கு ஒப்பந்தம் போடப்படும், அறுவடை நேரத்தில் சந்தை விலை குறைந்து இருந்தாலும், ஒப்பந்தம் போடப்பட்ட விலையிலே தக்காளி கொள்முதல் செய்யப்படும்.

கொள்முதல் செய்யப்பட்ட தக்காளியை அதிக விலைக்கு விற்றால் அதிலேயும் விவசாயிக்கு பங்கு தர வேண்டும். இதில் என்ன தவறு இருக்கின்றது. வடநாட்டில் எல்லா பொருளுக்கும் 8.5 சதவீதம் வரி. எல்லாமே சொசைட்டியில் கொடுக்க வேண்டும். அங்கு 3 சதவீதம் உள்ளாட்சி வரி, 3 சதவீதம் சொசைட்டி எடுத்துக் கொள்கிறது. 2.5 சதவீதம் புரோக்கர் கமிஷன் இதையெல்லாம் சேர்த்து, 100ரூபாய்க்கு தக்காளி விற்கிறது என்றால் ரூ.8.50 வரியாக கட்ட வேண்டும். இது சரியா, இல்லை நாங்கள் கொண்டுவந்தது சரியா?

ஒரு மூட்டை நெல் 1000 ரூபாய் என்றால் ரூ.85 கொடுக்க வேண்டும் வரியாக. இதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். ஸ்டாலின் ஆதரிக்கின்றார். விவசாயத்தைப்பற்றியே தெரியாது ஸ்டாலினுக்கு. அண்ணா தி.முக. ஆட்சியைப் பொறுத்த வரையில் விலை வீழ்ச்சி அடைகின்ற போது விவசாயி காப்பாற்றப் பட வேண்டும். அது தான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை வந்தால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அண்ணா தி.மு.க.

யாரை ஏமாற்ற பார்க்கிறார்?

வேளாண் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம் ஸ்டாலினே. விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் ஸ்டாலின். விவசாய நிலங்களை பிடுங்க கூடாது என்பதற்காக சட்டம் போட்டவர்கள் நாங்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று திட்டமிட்டு, பொய் பிரச்சாரங்களை செய்து, மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேறும் உபரி நீரை தூய்மைப்படுத்தி அருகிலுள்ள 625 கிராமங்களுக்கும், 5 பேரூராட்சிகளுக்கும் பற்றாக்குறையின்றி குடிநீர் வழங்கிட சுமார் 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி துவங்கப்பட்டு விட்டது. குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சோபுரம் பகுதியில் கெடிலம் மற்றும் கீழ்பழவனாறு இணையும் பகுதியில் மழைகாலங்களில் நீர்வரத்து அதிகமாகி விளைநிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதனை போக்கும் விதமாக அதிகாரிகளை அனுப்பி 1.6 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் அமைத்து மழைநீர் உள்வாங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உள்ளோம். இப்பணிக்காக சுமார் 88 கோடி ரூபாய் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்தப் பணியும் விரைவாக தொடங்க இருக்கிறது. எல்லா திட்டங்களையும் மக்கள் மனம் நிறைவு பெறும் வகையில் அம்மாவின் அரசு செயல்படுத்தும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வெற்றி வேட்பாளர் செல்வி ராமஜெயத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *