புதுடெல்லி, ஆக. 7–
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி வதித்த அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த புகழ் பெற்ற விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, டெல்லியில் 3 நாள் சர்வதேச மாநாடு துவங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, எம்.எஸ். சுவாமிநாதனின் தபால் தலையை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்துமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:–எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது.மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் எந்த சமரசமும் இல்லை.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை தனது வாழ்க்கையின் நோக்கமாக சுவாமிநாதன் கொண்டிருந்தார். சுவாமிநாதனின் அணுகுமுறைகள், கருத்துகள் இன்றும் இந்திய விவசாயத்தில் காணப்படுகின்றன. அறிவியலை பொது சேவை ஊடகமாக மாற்றியவர் எம்.எஸ்.சுவாமி நாதன்.
டாக்டர் சுவாமிநாதனை பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கும் அதிர்ஷ்டம் நமது அரசாங்கத்திற்குக் கிடைத்தது. இதனை எனது அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். உணவு தானியங்களில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்வதற்கான பிரச்சாரத்தை டாக்டர் சுவாமிநாதன் தொடங்கினார். அவரது அடையாளம் பசுமைப் புரட்சிக்கு அப்பாற்பட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பேசும்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
கடந்த ஆகஸ்டு 1ந்தேதி, இந்தியா உட்பட 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீத வரி விதித்தார். அத்துடன், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார். இந்தியா பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி, இன்று அமலுக்கு வரும் நிலையில், இந்தியா மீதான வரிவிகிதத்தை மேலும் உயர்த்தப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்து, நேற்று இந்தியா மீது அமெரிக்கா மேலும் 25 சதவீத வரி விதித்தது. இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, இன்று அமலுக்கு வருகிறது. நேற்று அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி, ஆகஸ்டு 27ந்தேதி அமலுக்கு வரும் என்று உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பருத்தி ஆகியவற்றை அதிகளவில் அணுகும் வகையிலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருள்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் ஒப்பந்தத்தில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை ஏற்க இந்தியா மறுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.இதனிடையேதான் இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் அதிகளவில் வரியை விதித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பல்வேறு வகையான வேளாண் பொருள்களும் பால் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால், வேளாண் துறையும் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது.
![]()





