செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி ரசீதுகளை வழங்கினார் எடப்பாடி

16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி ரசீதுகளை வழங்கினார் எடப்பாடி

விவசாயிகள் மகிழ்ச்சி; முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

அறிவித்த 8 நாட்களிலேயே செயல்படுத்தி காட்டி ‘விவசாயிகளின் பாதுகாவலன்’ என்பதை நிரூபித்தார்

சென்னை, பிப்.13–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (13–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். முதலமைச்சர் 5.2.2021 அன்று சட்டமன்ற பேரவை விதி எண். 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 8.2.2021 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று 31.1.2021 அன்று நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் இன்று 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி. சக்திசரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

பயிர்கடன் தள்ளுபடிக்கான ரசீது சான்றிதழை பெற்று சென்ற விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், நன்றியைும் தெரிவித்தார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 8 நாட்களிலேயே இதனை நிறைவேற்றி தந்திருக்கிறார். என்றென்றைக்கும் அம்மாவின் அரசு விவசாயிகளின் பாதுகாவலன் என்று சொல்லி வந்ததை முதலமைச்சர் நிரூபித்து காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *