நாடும் நடப்பும்

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், ஸ்டாலினின் பயன்மிகு திட்டம் தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறுகிறது

தேர்தல் வாக்குறுதி செயல்வடிவம் பெறுகிறது


-:ஆர். முத்துக்குமார்:-


பல நூற்றாண்டுகளாக தமிழர் வாழ்வில் பின்னி பிணைந்து இருக்கும் ஒன்று விவசாயமாகும். அது சங்க கால விவகாரமாக இருக்கலாம்; இன்று நம் நாட்டில் 60 சதவிகிதம் பேர் நேரிடையாக விவசாயத்துறையில் தான் இருக்கிறார்கள். தமிழகத்தின் வருவாயில் பெரும்பகுதியாக 55 சதவிகிதம் சேவை துறையிடம் இருந்து தான் வருகிறது. தயாரிப்பு துறையின் பங்களிப்பு 34 சதவிகிதமாகும்.

மீதி 11 சதவிகிதம் தான் விவசாயத்தின் பங்களிப்பாக இருக்கிறது.

புயல், வெள்ளம் அல்லது வறட்சி என எது வந்தாலும் மிகப்பெரிய சரிவை சந்திப்பது விவசாயத்துறை தான். அதன் தொடர்ச்சியாக இதர துறைகளும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து சரிவுகளை காண வேண்டிய நிலையே உள்ளது.

உதாரணத்திற்கு ஒரு பழ அறுவடை சிறப்பாக இருந்தால் அதை ஏற்றிச் செல்லும் வாகன நடமாட்டம் அதிகரிக்கிறது. அதை கையாள வேண்டிய அட்டை பெட்டி சமாச்சார துறைகளும் செழிப்பாக செயல்படும். மொத்த வியாபாரி முதல் சில்லறை வர்த்தகர் வரை எல்லோருமே மகிழ்ச்சி அடைகின்றனர் அல்லவா!

ஆனால் விவசாயிகளின் கடன் சிக்கல்கள் எழ காரணம் என்ன? பருவமழை தவறினால் விளைச்சலின்றி போய்விட்டால் அவர்களது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் தர என்ன செய்துள்ளோம்?

இக்கேள்விகளுக்கு விடையை தர தமிழக முதல்வர் ஸ்டாலின் புது வியூகத்தை அமைத்துள்ளார்.

அதன்படி இனி பொது பட்ஜெட் என்பதுடன் விவசாய பட்ஜெட்டையும் தமிழகம் சமர்ப்பிக்கும் என்று தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் வேளாண்மைக்கென தனியான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் அறிவித்தார்.

நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில் இந்த அரசு, வேளாண்மைத் துறையை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம் செய்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள், வல்லுநர்களின் முனைப்பான பங்களிப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், பயிரிடுவதற்கான புதிய முறைகள், வேளாண்மை நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக, கால்நடைப் பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுதல் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.

2021–22ம் ஆண்டில், 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை அடைய இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய பொது பட்ஜெட் சமர்ப்பிப்புக்கு முதல் நாளில் மாலையில் மத்திய ரெயில்வே பட்ஜெட் சமர்ப்பிப்பு நடைமுறையில் இருந்தது.

ரெயில்வே துறைக்கு மட்டும் அப்படி ஏன் விசேஷ சலுகை? வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் நமது பட்ஜெட் மாலை நேரத்தில் அரசு குடும்பத்தார் தெரிந்து கொள்ள ஏதுவாக சமர்பிக்கப்பட்டது.

அக்காலத்தில் மிக சக்திவாய்ந்த துறை ரெயில் போக்குவரத்து தான்!

ரெயில்வே சேவை வளர்ந்தால் நமது இதர எல்லா துறைகளும் வளரும் என்பதால் அதற்கு விசேஷ கவனம் செலுத்தவே பிரத்தியேக ரெயில்வே பட்ஜெட் சமர்பிப்பு நடைமுறைக்கு வந்தது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத ரெயில்வே பட்ஜெட் நம் நாட்டில் மட்டும் தொடர்ந்தது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதனால் எந்த பெரிய சாதகமான சிறப்பு இல்லாததால் அந்த நடைமுறையை கைவிட்டார்.

அன்று தொட்டே நாடெங்கும் பிரத்தியேக விவசாய பட்ஜெட் வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதர மாநிலங்களில் இல்லாத இப்புதுமையை முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் கொண்டு வருகிறார் என்று கவர்னர் பன்வாரிலால் தனது உரையில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால தமிழகம் பன்முகத் தன்மையோடு வளரும் என்பதில் அக்கறை கொண்டே முதல்வர் ஸ்டாலின் இப்புரட்சிகர அறிவிப்பை வெளியிட்டு இருப்பதை தமிழகம் வரவேற்கிறது. மொத்தத்தில் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியை வெறும் வாய்வார்த்தையாக மட்டுமின்றி செயல்வடிவம் தந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *