செய்திகள்

விவசாயிகளுக்கு எதிரான கங்கனா ரனாவத் கருத்து: ராகுல் காந்தி கண்டனம்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 27–

விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்தின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மோடி அரசு, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம் என தெரிவித்திருந்தார்.

கங்கனா ரனாவத் கருத்துக்கு பாஜகவே கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது கருத்துக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, கங்கனா ரனாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. விவசாயிகளை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகள் தங்களின் 378 நாள் போராட்டத்தில் 700 சக விவசாயிகளைத் தியாகம் செய்தவர்கள். அந்நிய நாட்டு சதிகாரர்கள் என்று பாஜக எம்.பி. கூறுவது, பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுள்ள மனநிலையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம். கங்கனாவின் அறிக்கையும் அதைத்தான் காட்டுகிறது. எனவே, கங்கனா ரனாவத் மதம் சார்ந்த அமைப்பு மற்றும் மிக முக்கிய விவகாரங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது.

உயிரிழந்த விவசாயிகளுக்குப் பாராளுமன்ற அவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தக் கூட மோடி மறுத்துவிட்டார். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உருவாக்கிய கமிட்டி இன்னும் செயல்படாமல் உள்ளது. இதுநாள் வரை தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதற்கெல்லாம் உச்சமாக விவசாயிகளைத் பா.ஜ.க. தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *