வாழ்வியல்

விவசாயிகளுக்கு உதவும் குறைந்த விலை குளிர்பதனப்பெட்டி

சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு

விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை வெகுதூரம் எடுத்துச் செல்வதற்காக குறைந்த விலையில் குளிர்பதனப் பெட்டியை சென்னை ஐஐடி மாணவர்கள் ஆய்வு செய்து உருவாக்கியுள்ளனர்.

சென்னை ஐஐடியில் உள்ள உயிரி தொழில்நுட்பவியல் துறையில் படிக்கும் ஆய்வு மாணவர்கள் சௌமல்யா முகர்ஜி, ரஜனி காண்ட் ராய் மற்றும் மெக்கானிக்கள் பொறியியல் துறையைச் சேர்ந்த ஷிவ் சர்மா ஆகிய மூன்று மாணவர்களும் இணைந்து டேன் 90 என்ற எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு போர்டபிள் குளிர் பதனப்பெட்டியை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக கிராமங்களுக்குச் சென்ற இந்த ஆய்வு மாணவர்கள், விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை குளிர்பதனப் பெட்டியில் சேகரிப்பதில் சிக்கல் இருப்பதை கண்டுள்ளனர்.

மேலும் விவசாயிகள் மிகப்பெரிய குளிர்பதனப் பெட்டிகளை வாங்கி பயன்படுத்துவது என்பது அதிக செலவு என்பதால் சிறு விவசாயிகளால் அது சாத்தியமில்லை என்பது தெரியவந்துள்ளது. அப்போதுதான் இந்த மாணவர்களுக்கு விவசாயிகளுக்காக குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ள தெர்மல் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த குளிர்பதனப்பெட்டி 58 லிட்டர் கொள்ளளவைக் கொண்டது. தற்போதுள்ள பேட்டரிகளை விட மிகக் குறைந்த மணிநேரங்களில் இந்த குளிர்சாதன பெட்டியில் உள்ள பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இந்த கண்டுபிடிப்பு மின்சார சிக்கல்களை கவனத்தில் கொண்டுள்ளது.

இந்த டேன் 90 கண்டுபிடிப்பை நோக்கி அப்லைய்ட் மெக்கானிக் துறையின் உதவி பேராசிரியர் சத்யநாராயணன் சேஷாத்திரி மாணவர்களை வழிகாட்டியுள்ளார்.

இந்த டேன் 90 காய்கறிகள் பழங்கள் போன்ற தோட்ட விளை பொருள்கள் , இறைச்சி, மீன், உயர் மதிப்புடைய மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளைக்கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கான ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடமும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய குளிர்பதனப் பெட்டியை வாங்குவதற்கு ரூ.5,000 முதல், ரூ.5,500 வரை மட்டுமே செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு, சமீபத்தில் நடைபெற்ற இந்தியா புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சி திட்டம் 2.0 இல் சிறந்த கண்டுபிடிப்பாக வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *