போஸ்டர் செய்தி

விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டம்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Spread the love

சென்னை, செப். 12

சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. அந்த திட்டத்தை இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தை துவக்கி வைப்பதற்கு முன்னதாக ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தலைநகர் ராஞ்சியில் 39 ஏக்கர் பரப்பளவில் ரூ.465 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 3 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாநில கவர்னர் திரவுபதி முர்மு, முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்குகினார்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்திட்ட தொடக்க விழாவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சத்திய நாராயணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு விழா மேடையில் பிரதமர் மோடி ஓய்வூதிய திட்டத்துக்கான உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 ஆயிரத்து 904 பேர் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 4953 பேர் இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *