செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்

சூலூர், மே 17–
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆனைமலை- நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சூலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
சூலூர் தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செஞ்சேரிபுதூர், சுல்தான்பேட்டை, செஞ்சேரிபுத்தூர், இடையார்பாளையம், பள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அதேபோல 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். 25 ஆண்டுகளுக்கு பின் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ஆவார் என துரைமுருகன் கூறுகிறார். இதிலேயே ஸ்டாலின் முதல்வர் ஆக மாட்டார் என்பது தெரிகிறது. மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.
தி.மு.க. தோல்வி உறுதி
மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, 3-வது அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டது. அந்த கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு மட்டுமே இருந்தது. இதனை மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா.நெசவு தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வந்தனர். ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் எந்த இடத்திலும் மின்வெட்டு இல்லை. எப்படி தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியதோ, அதேபோல தமிழகத்தில் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தேவையான தண்ணீரை கொண்டு வருவோம்.
டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது. தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெற்றிபெற்ற சட்டசபைக்கு சென்றால் சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைத்து தரப்படும். ஆனைமலை- நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். நொய்யல்- உப்பாறு திட்டம் செயல்படுத்தப்படும். செஞ்சேரிமலையில் சாலை வசதிகள், ஜல்லிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்எல்ஏக்கள் கரைப்புதூர் நடராஜன், சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், சார்பு அணி நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், கலைமகள் கோபால்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, மு.சுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கணேஷ், பட்டுலிங்கம், கருவம்பாளையம் மணி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கருணாகரன், சித்துராஜ், ராமமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் தம்பி மனோகரன், வளர்மதி தாமோதரன், சாகுல் ஹமீது, சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியம், துணை செயலாளர் காளிச்சாமி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பூபதி, தேமுதிக மாநில துணை செயலாளர் அக்பர் அலி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *