செய்திகள்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 4–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள்மற்றும்பயறு வகைத் தொகுப்புகளைவழங்கினார்.

மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலகக் கட்டடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டடங்களை திறந்து வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைத் துறைக்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்து, ரூ.1,94,076 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் 18 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று 2025–-26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை – உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற காய்கறி விதைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய 9 லட்சம் பழச்செடி தொகுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் அடங்கிய ஒரு லட்சம் பயறு வகை விதைத் தொகுப்புகள் ஆகியவற்றை விவசாய பெருமக்களுக்கு வழங்கும் வகையில், 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கி, இப்புதிய திட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் த.ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *