நாடும் நடப்பும்

விவசாயிகளின் எதிர்கால வளம் தடம் புரளுகிறது

* இடைத்தரகர்களின் ‘கை’ ஓங்குகிறது

* பாரதீய ஜனதாவிற்கும் அரசியல் ஆதாயம்


ஆர். முத்துகுமார்


ஒரு வருடமாக விவசாயிகள் தங்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய தீர்மாணங்கள் வேண்டாம் என தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களின் கோரிக்கை அரசியல் பின்னணி கொண்டது என்று பாரதீய ஜனதா கட்சியின் எதிர்வாதம் செய்து திரும்பப் பெறப் போவதில்லை என்று உறுதியாகவே இருந்தனர்.

ஆனால் பல முக்கிய தேர்தல்களை அதாவது பீகார், கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பாரதீய ஜனதாவின் மீது ஒருவித அதிருப்தி இருந்துள்ளதால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதால் இனி வர இருக்கும் டெல்லி, பஞ்சாப் மற்றும் அதிமுக்கிய உத்திரப்பிரதேச தேர்தல்களில் அந்த கரும்புள்ளியுடன் தேர்தலை சந்திக்க வேண்டாம் என்று முடிவெடுத்து பிரதமர் மோடி தனது மூன்று விவசாயத் சட்டங்களை ரத்து செய்து விட்டார்.

பாராளுமன்றத்தில் இந்த விவசாயிகள் சட்ட மசோதாவை அறிவித்த போது தன்னிச்சையாக, அதாவது மந்திரி சபையின் ஆதரவு மட்டுமே கொண்டு அறிவித்தது நினைவிருக்கலாம்.

பாராளுமன்றத்தில் விவாதமின்றி இப்படி விவசாயிகள் சட்டம் இயற்றப்படுவதா? என எதிர்கட்சிகள் வசைபாடின. விவசாயிகள் போராட்டத்தில் களம் இறங்கினர்.

டெல்லியில் குடியரசு தினத்தின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி தலைநகர் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம்.

மேலும் விமான நிலையம் போகும் பாதைகள் முதல் பல்வேறு வழித்தடங்களில் அவ்வப்போது கூச்சல் குழப்பங்கள் அவிழ்த்து விடப்பட்டு அங்கு நகர வாழ்க்கை பாதிப்படைந்து வந்தது.

கொரோனா ஊரடங்கு இருந்ததால் சர்வதேச பயணிகளின் நடமாட்டம் அதிகம் கிடையாது என்பதால் உலக அளவில் இப்போராட்டம் எந்தப் பாதிப்பையும் அதிகம் ஏற்படுத்தவில்லை.

இதுபற்றி சர்ச்சை எழுந்தபோதெல்லாம் மத்திய அரசும் பாரதீய ஜனதா அபிமானிகளும் கூறிய கருத்து ‘விவசாயிகளை எதிர்கட்சியினரின் தூண்டுதல்களால் தான் விவசாயிகள் போராடுவதாக கூறி வந்தனர்.

மேலும் இந்த மூன்று சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால் பெரிதும் பாதிக்கப்படுவது இடைத் தரகர்கள் தான்’, ஆகவே அவர்களின் தூண்டுதலால் தான் இப்போராட்டம் தொடர்வதாக கூறி வந்தனர்.

இந்தச் சட்டங்கள் வாபஸின் பின்னணியில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முக்கிய இடம் வகிக்கிறது. இம்மாநிலத்தின் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் 2017–-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு 312 இடங்கள் கிடைத்தன. இவற்றில் மேற்குப்பகுதியில் கணிசமான தொகுதிகள் அமைந்துள்ளன. ஜாட் சமுதாய விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தின் தாக்கம் இருந்தது.

இது உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அக்டோபர் 2-–ல் நடந்த கலவரத்தால் 5 உயிர்கள் பலியாகி கிழக்குப் பகுதிக்கும் பரவியது. இதன் பிறகும் உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாகவே வெளியாகி வருகின்றன. எனினும் பாஜக எதிர்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் அளிக்க விரும்பாமல் வேளாண் சட்டங்கள் வாபஸ் நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு உ.பி.யின் கிழக்குப்பகுதியிலும் விவசாயிகள் கணிசமாக இருப்பது காரணமாகி விட்டது.

இதேபோல் பஞ்சாபிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 2017ம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்து வருகிறது. அப்போது முதல்வரான கேப்டன் அம்ரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி துவக்கி உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது.

சுமார் முக்கால்வாசி அளவில் விவசாய நிலப்பரப்பு கொண்ட பஞ்சாபின் சுமார் 77 தொகுதிகளில் விவசாய வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை விவசாயிகளே நிர்ணயிக்கின்றனர். இச்சூழலில் பிரதமர் மோடியின் வேளாண் சட்டங்கள் வாபஸ் முடிவு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் நிலவிய பாஜக கூட்டணி, வேளாண் சட்டம் காரணமாக முறிந்திருந்தது. தற்போது சட்டங்கள் திரும்பப் பெறும் நிலையால் இக்கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்புள்ளது.

ஆக விவசாயிகள் நலனுக்காக எனக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு விட்டது.

பாரதீய ஜனதாவிற்கு வரும் காலத்தில் தேர்தல் ஆதாயம் நிச்சயம் உண்டு என்ற கண்ணோட்டத்தில் வாபஸ் பெறப்படுகிறது.

இடைத்தரகர்கள் லாபம் சம்பாதித்து விவசாயிகளுக்கு அநீதியை தடுக்கவும் எடுக்கப்பட்ட ஓரு முயற்சி தனிப் பெரும் மெஜாரிட்டி கொண்டு செயல்பட்டு வரும் பிரதமர் மோடியால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒட்டு மொத்தமாக வாபஸ் பெறப்படுகிறது.

இடைத் தரகர்களின் கை ஓங்கி இருப்பதன் நிதர்சனத்தை நாடே புரிந்து கொள்ள வெளிச்சம் போட்டுக் காட்டும் ஓர் அரசியல் நிகழ்வு இந்த வாபஸ் அறிவிப்பு!

எது எப்படியோ விவசாயிகளின் எதிர்கால வாழ்வும் வளமும் தடம் புரண்டுவிடாமல் விவசாயிகளுக்கு நீதியையும் அவர்களின் விளைபொருள்களுக்கு கட்டுபடியாகும் விலையையும் மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் .

அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் சரேந்திர மோடி எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *