செய்திகள்

விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: எடப்பாடி அறிவிப்பு

திருப்பூரில் இன்று 2வது நாளாக தீவிர பிரச்சாரம்

வெள்ளமென மக்கள் திரண்டு வந்தனர்

மத்தியில் அடிமையாக இருந்தது தி.மு.க. தான்; நாங்கள் அல்ல 

வேண்டியதை தட்டி கேட்போம்; பாதிப்பு வந்தால் அதை எதிர்ப்போம்

திருப்பூர், பிப்.12

விவசாய பம்பு செட்டுகளுக்கு இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 2வது நாளாக முதலமைச்சர் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியுடன் வந்து கலந்து கொள்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவ்வப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்து, அவரது பேச்சை வரவேற்கிறார்கள்.

அரசு செய்த சாதனைகளை பட்டியல் போட்டு காட்டும் முதலமைச்சர், அந்தந்த பகுதிக்கு செல்லும் போது அந்த பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை புள்ளி விவரங்களுடன் எடுத்து கூறி, இனி நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்களையும் குறிப்பிடுகிறார்.

ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பொய் பிரச்சாரம் செய்து வருவதை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருகிறது. ஒரு இடத்தை மற்றொரு இடம் மிஞ்சும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்கிறார்கள். பெண்கள் அதிக அளவில் வருவதை காண முடிந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி அம்மாவின் காலத்திலேயே அண்ணா தி.மு.க. கோட்டையாக விளங்கியது. உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியிலே பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் இருந்து இன்று வரை, இந்தத் தொகுதியில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி மக்களிடத்திலே நன்மதிப்பைப் பெற்றுள்ளோம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் தவறான செய்தியை பரப்பி வருகிறார். அண்ணா தி.மு.க ஆட்சியிலே எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்ற பொய்யான பிரச்சாரத்தை தொடர்ந்து கூறிவருகிறார்.

அதேபோல கனிமொழி எம்.பி. பேசுவது அனைத்தும் பொய், வாயிலிருந்து வருவது அனைத்தும் பொய். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அண்ணா தி.மு.க ஆட்சியிலே எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை என்ற பொய்யான பிரச்சாரத்தை கூறிவருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குடிமராமத்து திட்டத்தை பற்றி பேசி இருக்கின்றார். இந்த திட்டம் ஏட்டளவில் தான் இருக்கிறது என்று கனிமொழி பேசியுள்ளார். அவர் தெரிந்து பேசினாரா, தெரியாமல் பேசினாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு விவசாயத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சென்னை மாநகரத்தில் வசிக்கக் கூடியவர். திருப்பூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். வேளாண் பணிகள் நிறைந்த மாவட்டம்.

கனிமொழி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள். குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையினரால் 6,211 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 1,418 கோடி நிதி ஒதுக்கீடுசெய்துள்ளோம். பொதுப்பணித்துறையின் மூலம் 14,000 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 26,000 குளங்கள், குட்டை, ஏரிகளும் உள்ளன. இதில் 28,623 குளங்கள், குட்டைகள், ஏரிகள் ரூ.422 கோடியில் தூர் வாரப்பட்டுள்ளது. இவ்வளவு திட்டத்தையும் நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் சென்ற இடமெல்லாம் தவறான செய்தியை பரப்பிவருகிறீர்கள். நான் சொன்ன புள்ளிவிவரம் தான் சரி என்பதை திட்டவட்டமாக இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்.

விவசாயிகளின் அரசு

இந்த அரசு விவசாயிகளின் அரசு. ஒரு விவசாயி முதலமைச்சராக இருக்கின்ற அரசு. விவசாய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம், ஏனென்றால் வேளாண் பணி சிறந்தால் தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும். உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் உணவுப் பஞ்சம் இல்லாமல் நாடு செழிப்பாக இருக்கும். உழைக்கின்ற விவசாயிகளுக்கு எங்களுடைய அரசு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகின்றது. உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் பிடித்து தொடர்ந்து மத்திய அரசின் கிருஷ் கர்மான் விருதினை பெற்று வருகின்றோம்.

கனிமொழிக்கு பதில்

மேலும், கனிமொழி கூறுகிறார், மத்தியில் பாரதீய ஜனதா ஆளுகின்றது. பாரதீய ஜனதா அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டினை பரப்பி வருகின்றார். திருப்பூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலே, நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, அந்த கோரிக்கையின் பேரில், மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக்கல்லூரியை அமைத்துக் கொடுத்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கனிமொழி அவர்களே. 13 ஆண்டுகாலம் மத்திய அரசில் அங்கம் வகித்தீர்கள். அப்போது தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள், எவ்வளவு நிதி பெற்றுத்தந்தீர்கள், எதுவும் செய்யவில்லை. ஆனால், அண்ணா தி.மு.க அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றுத்தருகின்றோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை பெற்றுத்தந்த அரசு அம்மாவின் அரசு ஆகும்.

வீட்டிலிருந்தே குறைகளை சொல்லலாம்

இனிமேல் உங்கள் குறைகளை அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அதிகாரிகளிடத்தில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் செல்போன் மூலம் அரசு அதிகாரிகளுக்கு உங்களது பிரச்சனையை தெரிவிக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்தப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 10 நாட்களில் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தை துவக்க இருக்கின்றோம். இதற்கான உதவி மையம் எண் 1100.

விஞ்ஞான உலகம்

இந்த எண்ணில் உங்கள் பிரச்சனையை எந்த துறைக்கு அனுப்பினாலும் அந்த துறை தீர்த்து வைக்கும். இது ஒரு விஞ்ஞான உலகம், பெட்டியில் மனு போடுவது அந்த காலத்தோடு முடிந்து விட்டது. குடிநீர் பிரச்சனை, சாலைப் பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறித்தான், நாங்கள் நிறைவேற்றினோமாம், எப்படிப்பாருங்கள்? ஏற்கனவே இந்த திட்டத்தை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள் மக்களை தேடிச் சென்று அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு நிறைவேற்றினோம். தமிழ்நாடு முழுவதும் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 5.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதெல்லாம் அந்த அம்மையாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கார்ப்பரேட் கம்பெனி தி.மு.க.

இந்த பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் ஆராய்ச்சி நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையினை ஏற்று உடுமலைப்பேட்டையில் ரூ.250 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரியுடன் ஆராய்ச்சி நிலையம் தொடங்கியிருக்கின்றோம். எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை உடனே நிறைவேற்றுகின்ற அரசு, எனது தலைமையிலான அம்மாவின் அரசு. தி.மு.க ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அங்கு ஸ்டாலின் சேர்மன், அவரது குடும்ப உறுப்பினர்களான உதயநிதி, கனிமொழி, தயாநிதி ஆகியோர் போர்ட் ஆப் டைரக்டர்கள்.

பொதுமக்களின் வசதிக்காக, 2011 ம் ஆண்டு முதல் தற்போது வரை அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்தது அம்மாவின் அரசுதான். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை கொண்டு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தியதும் அம்மாவின் அரசுதான். இந்த தொகுதியில் மட்டும் ரூ.43 கோடி மதிப்பில் 10 இடங்களில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை கனிமொழி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள்.

உடுமலைப்பேட்டையில் ரூ.40 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். அதேபோல, ரூ.59 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தொகுதியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மதிப்பில் 2,946 பேர் பயனடைந்துள்ளனர். அம்மா இரு சக்கர வாகனம் 697 பேருக்கு வழங்கியுள்ளோம். சார்பதிவாளர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், உதவி கருவூல அலுவலகம் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டுள்ளது. குடிசை மாற்றுப்பகுதி வாரியத்தின் மூலமாக 2,163 குடியிருப்புகள் ரூ.65 கோடியில் கட்டித்தந்துள்ளோம். உடுமலைப்பேட்டை நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு பணிகளுக்காக சிறப்பு நிதியாக ரூ.50 கோடி வழங்கியது அம்மாவின் அரசு.

கொப்பரை தேங்காய் விலை உயர்வு

ஆழியாறு திட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்த பி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ஆழியாறு அணைப்பூங்காவில் மார்பளவு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டு அந்தப்பணியும் நடைபெற்று வருகிறது. ஆனைமலை-நல்லாறு திட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். அந்த திட்டத்தை நிறைவேற்ற நான் கேரள முதலமைச்சரை நேரடியாக சந்தித்து, திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளேன். அதுவும் நிறைவேற்றப்படும். தாண்டூர் கால்வாயின் இருபுறமும் உள்ள கரையை கான்கிரீட் கால்வாயாக மாற்ற தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுத்தார்கள். அது முழுவதும் தற்போது பழுதாகிவிட்டது. அதனை சீர்செய்ய அம்மாவின் அரசு ரூ.210 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றது.

தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்தி வழங்க பிரதமரை சமீபத்தில் புதுடெல்லியில் சந்தித்தபோது கோரிக்கை வைத்தேன். தற்போழுது சிறிதளவு உயர்த்தியிருக்கிறார்கள். சென்னைக்கு வரவுள்ள பிரதமரிடம் மீண்டும் கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த வலியுறுத்துவேன் என்பதைக் கூறிகொள்கிறேன். கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்துள்ளேன்.

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், அமைச்சர்களும் கருத்துக்களை தெரிவித்தார்கள். இங்குள்ள விவசாயிகள் பம்புசெட்டுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று அம்மாவின் அரசு, விவசாயிகள் பயன்படுத்தும் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் இனி 24 மணிநேரமும் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகள் வைக்கின்ற கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத்தியில் இருக்கும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு, அண்ணா தி.மு.க அரசு அடிமையாக இருக்கின்றது என கூறி வருகின்றார், அது தவறு. 13 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தது தி.மு.க. நீங்கள் தான் அடிமையாக இருந்தீர்கள். தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு, பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று நீங்கள் தான் அடிமையாக இருந்தீர்களே தவிர நாங்கள் இல்லை. எதைத் தட்டிக் கேட்போமோ, அதை தட்டிக் கேட்போம். மத்திய அரசால் தமிழ்நாட்டு மக்கள் பயனடையக்கூடிய திட்டம் வந்தால் ஆதரவளிக்கும் கட்சி அண்ணா தி.மு.க. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய திட்டங்கள் வந்தால் அதை எதிர்க்கக்கூடிய கட்சியும் அண்ணா தி.மு.க தான்.

வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *