செய்திகள்

விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி பழனிசாமி உறுதி

விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க சட்டம்

விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி பழனிசாமி உறுதி

காய்கறி பழங்கள் விற்க ஓசூர் அருகே 20 ஏக்கரில் பிரமாண்ட மார்க்கெட்

கிருஷ்ணகிரி, மார்ச் 22–

விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

விவசாயிகள் மேம்பாட்டுக்கு அரசு நிறைவேற்றிய திட்டங்களையும் முதலமைச்சர் எடுத்து கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (21–ந் தேதி) கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–-

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியிலே அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் கே.பி. முனுசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அவரை எதிர்த்து நிற்பவரை டெபாசிட் இழக்க செய்யுங்கள். அவர் ஏற்கனவே இந்த மாவட்டத்திலே பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், மக்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார், இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். கழகத்துடைய துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார்.

அவர் வெற்றி பெற்றால் வேப்பனஹள்ளி தொகுதிக்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, இத்தொகுதியை வளம் பெற செய்வார். அவர் நல்லவர், வல்லவர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கேட்டு நான் வந்திருக்கிறேன். என்னைவிட அரசியல் அனுபவம் மிக்கவர். இந்த தொகுதி வளம்பெற கே.பி.முனுசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இப்பகுதியில் விளைகின்ற காய்கறிகள் தான் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இப்படி விளைகின்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்காக அம்மாவின் அரசு ஓசூர் சர்வதேச ஏலம் மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிக் கொண்டு இருக்கிறோம். இங்கே மலர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறீர்கள். மலர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் அந்த மலர்களை பெங்களூருவில் சென்று விற்கிறீர்கள்.

20 ஏக்கரில் பிரமாண்ட மார்க்கெட்

இப்போது அம்மாவுடைய அரசாங்கம் ஓசூரிலே சர்வதேச ஏல மையம் அமைக்க உள்ளதால் இனி ஓசூரிலே நீங்கள் மலர்களை விற்கலாம். உடனடியாக விற்பனை செய்து பணம் கிடைக்கும். வேப்பனஹள்ளி பகுதியில் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை விற்க ஓசூர் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான மார்க்கெட் அமைத்து தர இருக்கிறோம். நீங்கள் மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டியதில்லை.

எல்லா பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து உங்கள் காய்கறிகள், பழங்கள், மலர்களை வாங்கி செல்வார்கள். அதுமட்டுமின்றி அந்த மார்கெட் அருகிலே பிரம்மாண்டமான குளிர்பதன கிடங்குகளை அமைக்க இருக்கிறோம். அங்கே உங்கள் பொருட்களை வைக்கலாம். நல்ல விலை கிடைக்கும் போது குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். இது அம்மாவுடைய அரசு வேளாண் பெருமக்களுக்காக செயல்படுத்துகின்ற திட்டம்.

2019–ம் ஆண்டு சட்டமன்றத்தில் பண்ணை பொது திட்டத்தை கொண்டு வந்தேன். நம் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். தக்காளி நடவு செய்யும் போது கிலோ 40 ரூபாய்க்கு விற்கும். விற்பனை செய்யும் போது கிலோ 5 ரூபாய்க்கு வந்துவிடும். இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து விடுகிறார்கள்.

நல்ல விலை கிடைக்கும்

அதனை களைவதற்காக வியாபாரியும், விவசாயியும் அக்ரிமெண்ட் போட்டு கொள்ள வேண்டும். கரும்பு விவசாயி ஆலைக்கு கரும்பு கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்வது போல. அதுபோல காய்கறிகள் பழங்கள் வாங்குகின்ற வியாபாரியும், விவசாயியும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்காக விவசாயியும் வியாபாரியும் அரசாங்கத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ள வியாபாரிகள் விவசாயியுடன் அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ள வேண்டும். நடவு செய்யும் போது தக்காளி 1 கிலோ 40 ரூபாய்க்கு என்று அக்ரிமெண்ட் போட்டு கொண்டு விட்டால், மார்க்கெட்டில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்றாலும், அந்த வியாபாரி 40 ரூபாய்க்கு தான் தக்காளியை அந்த விவசாயியிடம் வாங்க வேண்டும். இது நல்ல திட்டம் தானே.

அதேபோல கிலோ தக்காளி மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்கிறது என்றால், வியாபாரி லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிக்கு கொடுக்கவேண்டும், இதுவும் அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறது. இது அருமையான திட்டம். இந்த சட்டத்தை தி.மு.க. எதிர்க்கிறது. விவசாயிகள் எந்த காலத்திலும் நஷ்டம் அடையக்கூடாது. அதற்காக பண்ணை ஒப்பந்த திட்டத்தை எங்களுடைய அரசு கொண்டு வந்து சட்டமாக அமல்படுத்தி இருக்கிறோம். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வு ஏற்றம் பெறும்.

நிலத்தடி நீர் அடிக்கடி குறைந்து வருகிறது. அதற்காக சொட்டுநீர் பாசன திட்டத்தை அம்மாவுடைய அரசு கொண்டு வந்தது. குறு சிறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் தருகிறோம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகளுக்கு வருகின்ற ஏப்ரல் 1–ம் தேதி முதல் பம்புசெட்டுகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இப்படி எங்கள் அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து நன்மை செய்து வருகிறது.

உழவன் செயலி என்ற கைப்பேசி செயலி மூலம் ஏதாவது காய்கறி செடிக்கு நோய் வந்தால் அதை அப்படியே படம்பிடித்து அனுப்பினால் அதற்கு என்ன பூச்சி மருந்து அடிக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். காய்கறி பழங்கள் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம். தட்பவெட்ப நிலை, மழை வருமா என்று செய்தியும் தெரிந்து கொள்ளலாம்.

எல்லா விவசாயிகளும் இன்று கால்நடைகளை வளர்க்கிறார்கள். அந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகமான கால்நடை மருத்துவமனைகளை திறந்திருக்கிறோம். காலியாக இருந்த கால்நடை மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பி இருக்கிறேன். நான் அமெரிக்க சென்ற போது பப்பல்லோ பண்ணைக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு பசு 65 லிட்டர் பால் கொடுக்கிறது.

நம்முடைய பசு 15 லிட்டர் பால் தான் கொடுக்கிறது. இந்த கலப்பின பசுவை நம்முடைய விவசாயிகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு லாபமாக இருக்கும் என்று எண்ணினேன். அதற்காக அம்மாவுடைய அரசாங்கம் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்காவை சேலம் மாவட்டம், தலைவாசலில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நான் துவக்கி இருக்கிறேன்.

கலப்பின பசு

அந்த ஆராய்ச்சி நிலையத்தில் நம்முடைய தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அந்த கலப்பின பசுவை உருவாக்கி தர இருக்கிறோம். அதன்மூலம் விவசாயிகளுக்கு குறைந்தது 40 லிட்டர் பால் கொடுக்கும். நாம் வளர்க்கின்ற ஆடு 15 முதல் 20 கிலோ தான் இருக்கும். இந்த ஆராய்ச்சி நிலையத்தில் வளர்க்கின்ற ஆடு 50 கிலோ இருக்கும். அதை விவசாயிகளுக்கு தர இருக்கிறோம். அந்தப் பணிகள் இன்னும் ஒரு ஆண்டில் துவங்க இருக்கிறது. அப்படி துவங்குகின்ற போது கலப்பின பசுக்கள், ஆடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு தான் அம்மாவுடைய அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும்.

விவசாயிகள் வறட்சி, புயல்கள், தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டார்கள். அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடன்களை தள்ளுபடி செய்த அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். தாய்மார்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சரவனுக்கு குறைவாக அடமானம் வைத்து வாங்கிய தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எல்லா குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1500 ரூபாய் வழங்கப்படும். கேபிள் டிவி இணைப்பு இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகள் பெண்கள் பெயரில் டிராக்டர் வாங்கினால் 50 சதவிகிதம் மானியம், ஆண்கள் பெயரில் வாங்கினால் 40 சதவிகிதம் மானியம் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

உங்கள் தொகுதி வெற்றி வேட்பாளர் கே.பி. முனுசாமி பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார். கொடியாலம் அணையிலிருந்து நீரெற்று முறையில் கோதரபள்ளி, அத்திமுகம், வெங்கடேசபுரம், பட்டப்பள்ளி, தேகரியம், பினவாய்தொட்டி, குப்பளம், அம்முன்டம்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு நீரெற்று முறையில் இந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் வழங்கப்படும். குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் வழங்கப்படும்.

ஒரு விவசாயி முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தினால் விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் எனக்கு தெரியும். எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வெற்றி வேட்பாளர்கள் கே.பி. முனுசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *