செய்திகள்

விழுப்புரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டார்

விழுப்புரம், பிப்.1-

விழுப்புரம் மாவட்டத்தில் 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 வாக்காளர்கள் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2019 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் 2 மாதங்கள் நடைபெற்றன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கவும், நீக்கம் செய்யவும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாதங்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியின்போது மொத்தம் 66 ஆயிரத்து 134 பேர் மனு கொடுத்தனர். இவர்களில் 18 வயதை அடையாதவர்கள், கொடுத்த முகவரியில் குடியில்லாதவர்கள், தகுதியற்றவர்கள் போன்றவற்றால் 1,466 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள தகுதியான 64 ஆயிரத்து 668 பேர் தற்போது இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 1.9.2018 அன்று 13 லட்சத்து 12 ஆயிரத்து 2 ஆண்களும், 13 லட்சத்து ஆயிரத்து 548 பெண்களும், 368 திருநங்கைகளும் ஆக மொத்தம் 26 லட்சத்து 13 ஆயிரத்து 918 வாக்காளர்கள் இருந்தனர். பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் என 12 ஆயிரத்து 658 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 26 லட்சத்து ஆயிரத்து 260 பேருடன் தற்போது சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்படி 30 ஆயிரத்து 105 ஆண்களும், 34 ஆயிரத்து 542 பெண்களும், 21 திருநங்கைகளும் என 64 ஆயிரத்து 668 பேர் சேர்க்கப்பட்டனர்.

26,65,928 லட்சம் வாக்காளர்கள்

இதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 175 ஆண்களும், 13 லட்சத்து 29 ஆயிரத்து 373 பெண்களும், 380 திருநங்கைகளும் என மொத்தம் 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 பேர் உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், சப் கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி 31.1.2019 (நேற்று) முதல் தொடர்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடம் மாறுதல் தொடர்பாக மேற்கண்ட அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரடியாக விண்ணப்பங்களை அளிக்கலாம். அல்லது இந்திய தேர்தல் ஆணைய இணையதள முகவரி www.nvsp.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தினால் வாக்காளர்களின் வசதிக்காக செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இந்த செல்போன் செயலியை தங்களது ஆண்டுராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இ–சேவை மையம் மூலம் நகல் வாக்காளர் புகைப்பட அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தற்போது நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்கும்படி அரசியல் கட்சி பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தல் சீரிய முறையில் நடைபெற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப் கலெக்டர்கள் ஸ்ரீகாந்த், மெர்சிரம்யா, சாருஸ்ரீ, கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் சையத்மெகமூத், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், விழுப்புரம் நகராட்சி கமிஷனர் லட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் சக்கரை, காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *