செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேர் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிப்பு

விழுப்புரம், மே 22–-

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்த 65 வயது முதியவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரைச் சேர்ந்த 52 வயது ஆண், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விழுப்புரம் அருகேயுள்ள கொங்கரப்பட்டை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதியானது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், உடலில் நோய் எதிர்ப்பு மிகவும் குறைவானவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு கொண்ட நீரழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொண்டவர்களும் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்துக்கு பிராண வாயு உதவியுடன் சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த தொற்று வரும் வாய்ப்புண்டு. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும். தொடக்க நிலையில் இருந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். நோய் முற்றிவிட்டால் அறுவைச் சிகிச்சையே தீர்வு. இந்த நோய் மற்றவர்ளுக்கு பரவ வாய்ப்பில்லை. பொதுமக்கள் ஈரப்பதமுள்ள முகக்கவசங்களை அணியக் கூடாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *