செய்திகள்

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறை கிணறு

விழுப்புரம், மே 4–

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம் அருகே உள்ளது பிடாகம் குச்சிப்பாளையம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவர் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் சிறியதும் பெரியதுமான உறைகிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன. இதுபற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:

பிடாகம் குச்சிப்பாளையம் எல்லைக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு செய்தோம். அப்போது அளவில் சிறியதான உறைகிணறு இருப்பதைக் கண்டறிந்தோம். 6 அடுக்குகளுடன் காணப்படும் இந்த உறைகிணறு சங்க காலத்தைச் சேர்ந்ததாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கோடைக் காலங்களில் தண்ணீரைத் தேக்கி வைக்கவும் தெளிய வைத்து தண்ணீரை அருந்தவும் நீர்நிலைகள் பகுதிகளில் உறை கிணறுகளை மக்கள் ஏற்படுத்தினர்.

மேலும் இதுபோன்ற சிறியதும் பெரியதுமான பல உறைகிணறுகள் இப்பகுதி தென்பெண்ணை ஆற்றில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் சங்ககாலப் பொதுமக்கள் பயன்படுத்திய சுடுமண் குழாய்கள், மண்ணால் ஆன விளையாட்டுக் கருவிகள் மற்றும் அம்மி போன்ற புழங்குப் பொருட்களும் கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன. எனவே இப்பகுதி மக்கள் வாழ்விடமாக இருந்து பின்னர் அழிந்திருக்க வேண்டும்.

பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள உறைகிணறுகளைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசின் தொல்லியல் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழழகன், விஷ்ணு பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.