செய்திகள்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரம்

Spread the love

விழுப்புரம், மார்ச் 26–

கொரோனா வைரஸ் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க விழுப்புரம் அரசு மருத்துவமனையை 100 படுக்கை வசதிகளுடன் மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தமிழகத்தில் தாம்பரம், மதுரை தோப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதவிர மாவட்டந்தோறும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக தற்காலிகமாக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை முழுக்க, முழுக்க கொரோனா வைரசால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி மருத்துவமனையாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதையொட்டி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உடல்நலம் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு அறுவை சிகிச்சை செய்துகொண்டு உள்நோயாளியாக தங்கியிருந்த 22 பேர் தற்போது விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனியிடம் கூறியதாவது:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையை தனி மருத்துவமனையாக மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புறநோயாளிகள் பிரிவு அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென தனியாக கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 30 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருந்துகள்

இதுதவிர தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 30 படுக்கை வசதிகளும், அவசர கால சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதிகளும், வெண்டிலேட்டர் வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவமனையில் உள்ள அறைகளின் கதவு ஜன்னல்களில் கொசுவலைகள் அடிக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுவதற்கான வசதியும் செய்யப்பட்டு வருகிறது.தற்போது இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் 12 டாக்டர்கள், 20 செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இனி நோயாளிகள் வருகையை பொறுத்து 50 டாக்டர்கள், 70 செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிய உயிர்காக்கும் மருந்துகளுடன் தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *