ஏரி உடைப்பு; வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
வீடூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விழுப்புரம், டிச. 1–
விழுப்புரம் நகரில் 30 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து பெய்து வரும் மழை வருவதால் நகரம் முழுவதும் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
மேலும் வீடுர் அணை திறக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. நேற்று அதிகாலை 2 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 30 மணி நேரத்தை கடந்தும் விழுப்புரம் நகரில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. நகரின் விரிவாக்கப் பகுதிகளும் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. குறிப்பாக மழையினால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டது.
மயிலம் 51 செ.மீ.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரத்தில் 50 செ.மீ., மயிலம் பகுதியில் 51 செ.மீ., திண்டிவனத்தில் 37 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக, அங்குள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. குறிப்பாக கோட்டகுப்பம் ஜமியத் நகர் பகுதியில் பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமலும் அவதியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஜமியத் நகர் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தங்கள் பகுதிக்கு மீட்பு படையினர் யாரும் வரவில்லை என்றும், தாங்களாகவே தன்னார்வலர்கள் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
வீடுர் அணை நிரம்பியது
வீடூர் அணை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அதன் கொள்ளளவான
32 அடியில் 30.5 அடி நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வரத் தொடங்கியது. இதையடுத்து அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புறக் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நேற்று இரவு அபாய சங்கு ஒலியை எழுப்பினர். இன்று அதிகாலையில் அணையில் 9 கதவுகளையும் திறந்து, 36,203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர்.அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது.
வீடூர் அணையின் நீர் வரத்துகளை நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா ஆய்வு செய்தார். உதவிச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் பாபு ஆகியோர் அணை நீர்வரத்து குறித்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கடலூரில் விடிய, விடிய மழை
நேற்று இரவு முதல் விடிய, விடிய கடலூர் மாவட்டம், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர், அண்ணாமலைநகர், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலாக மழை பெய்தது. கடலூர் புதுச்சேரி சாலை, காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் சாலை, குள்ளஞ்சாவடி,கடலூர் கே.என் பேட்டை, கடலூர் குண்டுசாலை, கடலூர் ஜட்ஜ் பங்களா ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மழையால் மரங்கள் விழுந்தன. போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொக்லைன் மூலம் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றினர்.
கடலூர் நகரில் பல்வேறு சாலைகளில் ஆறு போல மழை தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. பாதிரிக்குப்பம் ஊராட்சி விக்னேஸ்வர நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி அருகே நகராமல் ஒரே இடத்தில் இருப்பதால் தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் பல பகுதிகளில் அதிகனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மரக்காணம்
மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டு அம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது காணி மேடு, மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, அசப்போர், நல்லம்பாக்கம், ராய நல்லூர், கந்தம்பாளையம் நகர் ஆகிய கிராமங்களுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆத்தங்கரையோரம் உள்ள கிராமங்களிலும் புகுந்துள்ளது.
மரக்காணத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரக்காணம் பகுதியில் மதியம் 4 மணிக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மரக்காணம், முருக்கேரி, கந்தாடு, பிரம்மதேசம் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. மின் தடையால், ஊராட்சி நிர்வாகத்தினர் ஜனரேட்டர் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றாததால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாரவாக்கம், கூனிமேடு இ.சி.ஆரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திண்டிவனம் மரக்காணம் சாலையில் ஆங்காங்கே வெள்ளம் சூழந்துள்ளதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால் மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பி அணைக்கு வினாடிக்கு 9500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
மயிலத்தில் 51 செ.மீ. மழை
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–
மயிலம் – 51 செ.மீ., புதுச்சேரி – 49 செ.மீ., பத்துகண்ணு – 45 செ.மீ., திருக்காணூர் – 43 செ.மீ., புதுச்சேரி டவுன் – 40 செ.மீ., திண்டிவனம் – 37 செ.மீ., நெமூர் 35 செ.மீ., பாகூர் – 32 செ.மீ, செம்மேடு – 31 செ.மீ., வளவனூர், கோலியனூர் தலா 28 செ.மீ., விழுப்புரம் – 27 செ.மீ., செஞ்சி, கெடார் தலா 25 செ.மீ., வாளத்தி, வானூர், சூரப்பட்டு, மரக்காணம் தலா 24 செ.மீ., கடலூர், ஆவலூர்பேட்டை தலா 23 செ.மீ., திருவண்ணாமலை, சேத்பட் தலா 22 செ.மீ., ஜமுனாமரத்தூர், கடலூர் கலெக்டர் அலுவலகம், ஆனந்தபுரம், உத்திரமேரூர் தலா 21 செ.மீ., மதுராந்தகம், கீழ்பெண்ணாத்தூர், கும்மிடிபூண்டி, செங்கல்பட்டு தலா 20 செ.மீ., ஆவடி, திருக்கழுக்குன்றம், வானமாதேவி தலா 19 செ.மீ., திருத்தணி, ஆரணி, முகையூர், ஆற்காட் தலா 18 செ.மீ., குடிதாங்கி, செய்யார் தலா 17 செ.மீ., திருக்கோயிலூர், வந்தவாசி, தாமரைபாக்கம், கலசபாக்கம், கஞ்சனூர், தாம்பரம் தலா 16 செ.மீ., தண்டரம்பேட்டை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வாலாஜா, செய்யூர், எம்.ஜி.ஆர். நகர், அயனாவரம் தாலுக்கா ஆபிஸ், முண்டியம்பாக்கம், கலவை தலா 15 செ.மீ.,
ஏற்காடு, செய்யார், அரக்கோணம், சோளிங்கூர், வெம்பாக்கம், பண்ருட்டி, பள்ளிபட்டு, கள்ளகுறிச்சி, மகாபலிபுரம், ஜெயா என்ஜினியரிங் கல்லூரி தலா 14 செ.மீ., கொரட்டூர், அனிகட், ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், காவேரிபாக்கம், ஆர்.கே.பேட், மடம்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், பனப்பாக்கம், வாலாஜாபாத், ரெட் ஹில்ஸ், பூண்டி, மேனாம்பூண்டி, மின்னல், திருவள்ளூர் தலா 13 செ.மீ., மீனம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழவரம், காளையநல்லூர், கொளப்பாக்கம், அயப்பாக்கம், ராணிப்பேட், திருக்கோயிலூர், மதுரவாயல், திருத்தணி தலா 12 செ.மீ., சென்னை, திருத்தணி, ஆலந்தூர், மணலூர்பேட், அரியலூர், வெங்கூர், மீனம்பாக்கம், அண்ணா நகர், அம்மூர், சென்னை இ.சி.ஆர். ரோடு தலா 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.