செய்திகள்

விழுப்புரத்தில் ரூ.1.50 கோடியில் பூங்காவுடன் குளம் சீரமைப்புப் பணி

விழுப்புரத்தில் ரூ.1.50 கோடியில் பூங்காவுடன் குளம் சீரமைப்புப் பணி

விரைந்து முடிக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு

விழுப்புரம், செப்.2–-

விழுப்புரத்தில் ரூ.1.50 கோடியில் நடைபெற்று வரும் பூங்காவுடன் கூடிய குளம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

விழுப்புரம் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பழைமையான கோயில் குளம், பயன்பாடின்றி பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வந்தது. குப்பை மேடாகி, சுகாதாரச் சீர்கேடாக காட்சியளித்த இந்தக் குளத்தை சீரமைத்து, ரூ.1.50 கோடி மதிப்பில், பூங்கா, நடைபாதையுடன் கட்டமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, பணியைத் தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து குளம் சீரமைக்கும் திட்டப்பணி ஒப்பந்தம் விடப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் 65.50 மீட்டர் அகலமும், 50.50 மீட்டர் நீளத்திலும் குளத்தின் உள்கட்டமைப்பு அமைகிறது. இதனுள் உள்வட்டமாக, மேலும் தண்ணீர் தேங்கும் குளம் கட்டமைக்கப்படுகிறது. குளத்தின் வெளியே சிறுவர் பூங்கா, நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவை அமைகிறது.

இந்தக்குளம் சீரமைப்புத் திட்டப் பணிக்கான, வெளிப்புறச்சுவர்கள் கட்டமைக்கப்பட்டு, குளம் கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது உள்பகுதி தண்ணீர் தேங்கும் குளத்துக்கு 4 பக்க கான்கிரீட் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். உள்பகுதி குளம் அமைக்கும் பணி, வெளிப்புறச் சுவர்கள், சுற்றுவட்ட குளம் சீரமைப்பு கட்டமைப்புப் பணிகளை பார்வையிட்டு, கட்டமைப்பின் கான்கிரீட் தரத்தை ஆய்வு செய்தார்.

அப்போது, குளம் சீரமைக்கும் திட்டப்பணியை விரைந்து முடிக்கவும், தரமாக மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *