விழுப்புரம், செப் 10
விழுப்புரத்தில் 6 புதிய புறநகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் க.பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்., விழுப்புரம் சார்பில், புதிய புறநகர பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி , மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியுர் அ.சிவா ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அனைத்துத்துறைகளும் முதன்மைத் துறைகளாக விளங்கிடும் வகையில், பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மக்களின் அன்றாட அடிப்படை தேவையான பேருந்து சேவையினை மேம்படுத்திடும் வகையில் கூடுதல் பேருந்து வசதிகள், புதிய வழித்தடங்களில் பேருந்து வசதிகள் போன்றவற்றினை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்.
அதனடிப்படையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மைதானத்தில், 06 புதிய புறநகரப் பேருந்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் புதிய புறநகரப் பேருந்துகள் திருக்கோவிலூர் – விழுப்புரம் – புதுச்சேரி வரை முகையுர், விழுப்புரம், வளவனூர் மற்றும் மதகடிப்பட்டு வழித்தடத்திலும், விழுப்புரம் – புதுச்சேரி வரை வளவனூர், மதகடிப்பட்டு, திருபுவனை வழித்தடத்திலும், விழுப்புரம் – புதுச்சேரி- திருச்சி வரை, மதகடிப்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழித்தடத்திலும், புதுச்சேரி – ஆரோவில் வழித்தடத்திலும், புதுச்சேரி – விழுப்புரம் – புதுச்சேரி திருச்சி வரை மதகடிப்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழித்தடத்திலும், விழுப்புரம் – புதுச்சேரி – சேலம் வரை மதகடிப்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கும்.
விழுப்புரம் மண்டலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 81 புதிய பேருந்துகளில் இதுவரை 51 புதிய புறநகர பேருந்துகள் மற்றும் 15 புதிய மகளிர் விடியல் பயண நகரப்பேருந்துகள் என என மொத்தம் 66 பேருந்துகள் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 6 புதிய புறநகரப் பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, விழுப்புரம் போக்குவரத்துக்கழகம், மேலாண் இயக்குநர் குணசேகரன், பொது மேலாளர் சதிஷ் குமரர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.