சிறுகதை

விழிப்பு – இரா.இரவிக்குமார்

வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர் ராகுலும் பிரியாவும்.

அன்று அதிகாலை திட்டமிட்டபடி தெரு முனையில் பைக்கில் வந்து காத்துக் கொண்டிருந்த ராகுலை வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது சென்றடைந்தாள் பிரியா. கையில் சின்ன ஹேண்ட்பேக்குடன் வந்தவளை வியப்புடன் பார்த்தான் ராகுல்.

“ராகுல், சீக்கிரம் கிளம்பு! யாரும் நம்ம பாக்குறதுக்கு முந்தி இங்கிருந்து போயிடணும்!” என்று பில்லியனில் ஏறி அமர்ந்து அவசரப்படுத்தினாள்.

ஏதோ சிந்தனையிலிருந்து விடுபட்ட ராகுல் நிதானமாகச் சற்றுத் தூரம் போனவன் அவளிடம் பைக்கை ஓட்டிக் கொண்டே பேசினான்,

“பிரியா, வெறும் ஹேண்ட்பேக்குடன் வந்திருக்கியே மாத்துறதுக்குத் துணி… சரி, அதவிடு! உன் நகையெல்லாம் எடுத்துட்டு வந்தியா? அது ஆத்திர அவசரத்துக்கு உதவும் இல்லே!”

“அய்யய்யோ!… இந்த ஐடியா எனக்கில்லாம போச்சே!… சுத்தமா மறந்துட்டேன்!” என்றாள்.

“இப்ப என்ன செய்யலாம்?” என்று கேட்டவனிடம் “பைக்கை வீட்டுக்கு விடு. நகையெல்லாத்தையும் வீட்டிலிருந்து எடுத்துட்டு வர்றேன்! நீ தெரு முனையில் மறுபடியும் காத்திரு!” என்றாள்.

அவள் சொன்னபடி அவன் செய்தான். பைக் நின்றது. அவள் பைக் பின்னாலிருந்து அவசரமாக இறங்கி வீட்டை நோக்கி நடப்பதற்கு முன் அவனிடம் கேட்டாள், “நகை, மாற்றுத் துணிகள் எல்லாம் எடுத்துட்டு வர ஒரு சூட்கேஸ் தேவைப்படும். எல்லோரும் நம்மைப் பாக்கறதுக்கும் அது வழிவகுக்கும். முக்கியமா எங்க வீட்ல உன்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம் கிடையாது! என் நகை நட்டுகளுக்காக என்னை இழுத்துட்டுப் போய் நீ அவற்றை வித்து நாம ஆடி, ஓடி, ஓய்ஞ்ச பின்னர் எனக்கு டாடா காட்டிட்டுப் போய்டுவேனு பேசுவாங்க… அது நல்லாவா இருக்கும்? ஏன் நகைகள் இல்லாம நாம வாழ முடியாதா? இப்ப நான் வீட்டுக்குப் போய் நகைகளோட திரும்ப வர்றது ஃபிஃப்டி ஃபிஃப்டி சான்ஸ்தான். என்ன சொல்றே… நல்லா யோசிச்சு சொல்லு?”

பிரியா ராகுலிடம் கேட்டது கெஞ்சுவது போல் இருந்தது.

“இல்ல பிரியா, நகைகள் முக்கியம். அவை நமக்கு நம்பிக்கையும் வாழ்க்கையில் செட்டில் ஆகுற வரைக்கும் ரொம்ப உதவியாகவும் இருக்கும். வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்கிடாதே! நான் சொன்னபடி நகைகளை எடுத்துட்டு வா!” என்று ராகுல் அவளுக்குத் தைரியம் கொடுத்தான். பின்பு அவள் அவனிடமிருந்து வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் வீட்டுக்குப் போகும்போது அவளது சின்ன ஹேண்ட் பேக்கில் அவள் வீட்டிலிருந்து எடுத்து வந்த நகைகள் எல்லாம் பத்திரமாக இருப்பதைக் கைகளால் தொட்டு உறுதி செய்து கொண்டாள்!

அவள் விழித்துக் கொண்டாள்; வீட்டுக்குள் போனவள் திரும்பி வெளியே வரவே இல்லை .

ராகுல் ஏமாந்து போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *