சென்னை, மே 14–
குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை புற்றுநோயை (ரெட்டினோ பிளாஸ்டோமா) தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் நடைபெற்றது.
அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, டென்னிஸ் வீரரும், பயிற்சியாளருமான ரமேஷ் கிருஷ்ணன், சங்கர நேத்ராலயா தலைவர் டி.எஸ்.சுரேந்திரன், தலைமை நிர்வாகி கிரிஷ் ராவ், குருதி சார் நோய் நிபுணர் தரணி ஜெயராமன், விழித்திரை புற்றுநோய் நிபுணர் சுகனேஸ்வரி, டாக்டர் சதீஷ் ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ரெட்டினோ பிளாஸ்டோமா தொடர்பான சிறப்பு மருத்துவக் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. அதில் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதுதொடர்பாக சங்கர நேத்ராலயா மருத்துவர்கள் கூறியதாவது:–
‘ரெட்டினோ பிளாஸ்டோமா என்பது குழந்தைகளின் 2 வயதுக்குள் விழித்திரையில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகும். மரபணு ரீதியான காரணங்களால் இந்நோய் ஏற்படலாம் என்றாலும், அத்தகைய காரணமின்றியும் பலருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது.
ரெட்டினோ பிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கீமோதெரபி, லேசர், கதிர்வீச்சு, கிரையோதெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் வாயிலாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் தீவிர பாதிப்பை தவிர்க்கலாம்.
இம்மாதம் 19ந் தேதி வரை ரெட்டினோபிளாஸ்டோமா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.