செய்திகள்

விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

Makkal Kural Official

திருவனந்தபுரம், மே 2–

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.8,867 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த துறைமுகம் கேரளத்துக்கும் நாட்டுக்கும் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட கூறினார்.

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கான முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை கேரள அரசு செலவிட்டுள்ளது.

துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து மோடி பேசியதாவது:–

விழிஞ்சம் துறைமுகம் காரணமாக கடல்சார் வர்த்தகத்தில் கேரளம் முக்கிய இடத்தைப் பெறும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நாட்டின் ஆழ்கடல் சரக்குப் போக்குவரத்து துறைமுகமாகவும் இது அமைந்துள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்.

உலக நாடுகளுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ள இந்தியா இதுவரை கொழும்பு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைத்தான் நம்பியிருந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து பொருள்களை சிறிய கப்பல்களில் இந்த நாட்டுத்துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து சரக்குக் கப்பல்களில் ஏற்றி அனுப்பும் நிலை இருந்தது.

தற்போது ஆழ்கடல் சரக்குப்போக்குவரத்து துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தால் இனி 20 ஆயிரம் கண்டெய்னர்களைக் கொண்ட எந்த சரக்குக் கப்பலும் இந்தியாவுக்கு நேரடியாக வரலாம். சர்வதேச கடல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைந்திருப்பதால், வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிக்கவிருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல்கள் துறைமுகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, இதனால் அவற்றின் வேகம் பாதிக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், நமது துறைமுகங்களின் செயல்திறன் குறிப்பாக முக்கிய துறைமுகங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளது.

மகாராஷ்ரா மாநிலத்திலும் இதுபோன்ற ஆழ்கடல் போக்குவரத்துத் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் இந்த துறைமுகத்தை தொடங்குகிறேன். அவர்களின் இழப்பு, தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் முக்கியமான தூண். பினராயி விஜயனும், சசி தரூரும் பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதலமைச்சர் பினராயி விஜயன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தானியங்கி துறைமுகம்

விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகம். நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுதான். இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது. இதனால் சரக்குகளை விரைவில் கையாள முடியும்.

நாட்டின் 75 சதவீத சரக்கு கன்டெய்னர்களை இதுவரை இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம்தான் கையாண்டது. இதனால் நமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இனி சரக்கு கன்டெய்னர்களின் போக்குவரத்து விழிஞ்சம் துறைமுகம் மூலம் நடைபெறும். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையின்கீழ் விழிஞ்சம் துறைமுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் ஒப்பந்ததாரராக அதானி குழுமம் உள்ளது.

இந்த துறைமுகத்தில் மிகப் பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இயற்கையிலேயே ஆழமான பகுதிகள் உள்ளன. இது 3 கி.மீ. தூரம் நீண்டுள்ளது. இங்கு 28 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள 9 மாடி கட்டிடம் மிகப் பெரிய பொறியியல் சாதனை. இங்கு கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற பரிசோதனையில் 272-க்கு மேற்பட்ட சரக்கு கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. 5 லட்சத்து 50,000 கன்டெய்னர்களுக்கு மேல் இங்கு கையாளப்பட்டுள்ளது.

இங்கு சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட ஏஐ கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இங்கு மாதத்துக்கு 1 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாள முடியும். மிகப் பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான் எம்எஸ்சி துருக்கி விழிஞ்சம் துறைமுகம் வந்து சென்றது முக்கியமான நிகழ்வாகும்.

முன்னதாக விழிஞ்சம் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு ஐஎஸ்பிஎஸ் தரச்சான்று வழங்கி ஐஎம்ஓ கவுரவித்தது. இது வரலாற்றுச் சாதனை என்று மத்திய துறைமுகம், கப்பல்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. இச்சான்றின் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தில் சர்வதேச அளவிலான கடல்சார் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *