செய்திகள்

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்கங்கள்

சென்னை, ஜன.29–

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்கங்கள் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அகில இந்திய குடிமுறைப் பணியாளர்களுக்கான கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களையும் கோப்பையையும் வழங்கினார்.

அகில இந்திய குடிமுறைப் பணியாளர்களுக்கான கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் நேரு உள் விளையாட்டரங்கில் 25–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியில் 264 வீரர்களைக் கொண்ட 22 மாநில விளையாட்டு அணிகள் கலந்துகொண்டன. இதில் சென்னை மண்டல விளையாட்டு வாரியம் முதலிடத்தையும் (ஆர்.எஸ்.பி, சென்னை), புதுடெல்லியின் மத்திய தலைமைச் செயலகம் இரண்டாம் இடத்தையும், கொச்சின் மண்டல விளையாட்டு வாரியம் மூன்றாமிடத்தையும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நான்காமிடத்தையும் பெற்றன.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பேசுகையில் கூறியதாவது:–

இப்போட்டியில் பங்குபெற்ற அனைத்து வீரர்களையும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளேன். விளையாட்டில் மட்டும்தான் இரண்டாமிடம் பெற்றவர்கள் முதலிடத்தையும் பெறமுடியும். அத்தகைய சிறப்பு விளையாட்டிற்கு உண்டு.

விளையாட்டைப் பொறுத்தவரையில் போட்டி மனப்பான்மை உண்டு, ஆனால் பொறாமை இருக்காது. மறைந்த புரட்சித்தலைவி அம்மா 2004–ம் ஆண்டில் விளையாட்டிற்கென்று விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைத்தார். அதுபோல, நேரு உள் விளையாட்டரங்கம் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு விளையாட்டு வீரர்களுக்குப் பயன்பட ஓர் அடித்தளமான அமைப்பை உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

3 சதவிகித இடஒதுக்கீடு

இந்திய அளவில் தமிழகம் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து முன்னிலையில் வருவதற்கு தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பல சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள். சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் பெறுகிறவர்களுக்கு அரசுத்துறைகளில் உள் ஒதுக்கீடாக 3% வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்கம்

அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம், இத்தகைய அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும். தமிழகத்தில் கிராம அளவில் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் அதிகளவில் விளையாட்டில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படுவதற்கு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

அதுபோல சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் விளையாடுகிற போட்டிகளில் நம்பிக்கையோடு பங்குபெறுவதற்கும் சுமார் 10 ஆண்டு காலத்திற்கு பயிற்சி கொடுக்க தனியார் நிறுவனங்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது நல்லதொரு பலன் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

2017–18–ம் ஆண்டில் அகில இந்தியப் பள்ளிக் குழுமத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்ற தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக அரசு ரூ.8 கோடியே 21 லட்சம் உயரிய ஊக்கத்தொகையை அண்மையில் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக முதலமைச்சர் வழங்கினார். அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டில் முதன்மை மாநிலமாக உருவாவதற்கு அரசு அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அரசு முதன்மைச் செயலர் தீரஜ்குமார் தலைமையுரை ஆற்றினார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சந்திர சேகர் சாகமூரி வரவேற்புரை ஆற்றினார். முதுநிலை மேலாளர் சாமுவேல் ராஜா டேனியல் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *