கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
சென்னை, மார்ச்.12-
விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு அமைத்த தேடல் குழு செல்லாது என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள கவர்னர், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் (சென்னை) துணைவேந்தரை அடையாளம் காணுவதற்கான தேடல் குழுவை அமைத்து உள்ளார். இந்த குழுவில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தின் விதிகள் மற்றும் 2018-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுசிஜி) நடைமுறை விதிமுறைகளின்படி கவர்னரின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர். அதில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கட்டாயமாகும்.
கவர்னர், தமிழக அரசுக்கு கடந்த 2024-ம் அண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி எழுதிய கடிதத்தில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் பிரதிநிதி உள்பட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தேடல் குழுவை அறிவிக்க அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தேடல் குழுவை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் பிரதிநிதி சேர்க்கப்படவில்லை. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட தேடல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என்றும் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
எனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் செல்லாது. எனவே கவர்னர், தமிழக அரசிடம், பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் பிரநிதியை உள்ளடக்கிய, கவர்னரால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் (சென்னை) துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவை அறிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவரின் பிரதிநிதியை விலக்கி அமைக்கப்பட்ட தேடல் குழுவை திரும்பப்பெற வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.