சிறுகதை

விளிம்பு நிலை மனிதர்கள் …! – ராஜா செல்லமுத்து

அலுவலகம் செல்லும் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலைக் கடந்து செல்வான் மோகன். அப்படிக் கோவிலைக் கடக்கும் போதெல்லாம் அவன் சாமி கும்பிடத் தவறுவதில்லை. சாமி கும்பிட்டு மனதிற்குள் நிறைவாக அந்த வழியாக வரும்போது அவனை ஒரு சம்பவம் தினந்தோறும் உறுத்திக் கொண்டே இருக்கும்.

ஏன் இவர்கள் இந்த வீதியில் வசிக்க வேண்டும் ?அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள் அவ்வளவு வயதாகாத அந்தப் பெண்மணி. நல்ல தோற்றமுடைய அந்த ஆண் மகன். இப்படி இருக்கும் இவர்களால் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து குடியிருக்க முடியாதா? குளிப்பதற்கு ,பெண்கள் உடை மாற்றுவதற்கும் இயற்கை உபாதை கழிப்பதற்கும் இவர்களெல்லாம் எங்கு செல்வார்கள் ? என்று தினந்தோறும் அந்த வீதியில் வாழும் மனிதர்களை பார்த்துக் கொண்டே கடந்து செல்வான் மோகன் .

சிறிது நேரத்திற்கு முன் கடவுளே இந்த பூமி நன்றாக இருக்க வேண்டும். யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது என்று தானே கும்பிட்டு வந்தேன் . கோயிலைக் கடப்பதற்கு இப்படி ஒரு சோதனையா? என்று தனக்குத்தானே நொந்து கொள்வான் .

அவன் அலுவலகம் செல்லும் வரை அவன் மனதிலே அந்த நிகழ்வு அப்பி கிடக்கும். சரியாகத் தலைவராக குழந்தைகள். குளித்தும் குளிக்காமல் இருக்கும் கணவன், மனைவிகள். அந்த சாலையிலேயே உணவை தயாரிக்கும் அவலம். இதை எல்லாம் அவன் நினைத்துக் கொண்டே செல்வான். இவர்கள் ஏன் இப்படி வாழ வேண்டும்? மற்றவர்களைப் போல் உறைவிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே செல்வான் மோகன்.

ஆனால் தவறியும் அவர்களுடன் அவன் பேசியது இல்லை. காரணம் அவர்களின் சுத்தம் சுகாதாரம் உடல் அமைப்பு, சராசரி மனிதர்களை விட சற்றுக் குறைந்து இருந்ததால் அவன் பேசுவதை தவிர்த்திருந்தான்.

ஆனால் ஒருமுறை அந்த வழியாக மோகன் நடந்து செல்லும் போது

அண்ணா ஒரு கிலோ அரிசி வாங்கித் தாங்க பிள்ளைங்க பசிக்குதுன்னு சொல்லுதுக என்று அந்தப் பெண் கேட்டபோது மோகனுக்குத் தூக்கி வாரி போட்டது. இவர்களிடம் கோபம் காட்டுவதா? உங்களுக்கெல்லாம் உடம்பு நன்றாகத்தானே இருக்கிறது ஏன் உழைத்து சாப்பிடக்கூடாதா?. மனைவி குழந்தைகளை இப்படி வீதியில் விட்டுவிட்டு பொறுப்பில்லாமல் திரியும் கணவனைக் கன்னத்தில் அறையக்கூடாதா? என்றெல்லாம் கோபம் கொப்பளித்துக் கொண்டுதான் வரும் . ஆனால் இதையெல்லாம் மடக்கிக் கொண்டு அந்தப் பெண் தன்னிடம் அரிசி கேட்டபோது, அதையும் சகித்துக் கொண்டு அவள் கணவன் கீழே தலை குனிந்து அமர்ந்து இருந்தானே? அவனை என்ன செய்வது? இவனுக்கு குடும்பம் குழந்தைகள் தேவைதானா? என்று நாக்கு இழுத்துச் சாகும்படி கேட்டு விடலாம் போல தோன்றியது மோகனுக்கு .

ஆனால் அப்படி கேட்பது மனித குலத்திற்கு குறைவென்று நினைத்தான். எதுவும் பேசாமல் தலையாட்டியபடியே அந்தப் பெண் கேட்ட அரிசியைவிட ஐந்து கிலோ அதிகமாகவே வாங்கிக் கொண்டு வந்த கொடுத்தான். அந்த பெண்மணிக்கு அவ்வளவு சந்தோஷம்.

. ரொம்ப நன்றி அண்ணா என்று அவள் கண்ணீர் ததும்ப மோகனைப் பார்த்தபோது அவனுக்கு என்னவோ போலானது. அப்போதும் எதுவும் பேசாமல் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து ,அந்த குடும்பத்தை காணவில்லை. நாம் மனதிற்குள் திட்டியது அவனுக்கு உரைத்து விட்டது போல. குடும்பத்தை கூட்டிக்கொண்டு வேறு இருப்பிடம் சென்று விட்டானா? வாடகை வீட்டில் குடும்பத்தை அமர்த்தி விட்டானா ?என்று யோசனை செய்தான் மோகன்.

அன்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது தினந்தோறும் பார்க்கும் அந்த அவலக் காட்சி அங்கு அரங்கேறவில்லை. நிம்மதி பெருமூச்சு விட்டு அலுவலகம் முடித்து திரும்பி வரும்போது ஒரு கோவில் திருப்பத்தைத் திரும்பி தான் அவன் வீட்டுக்கு வர வேண்டும் அன்று அவன் இரு சக்கர வாகனத்தில் செல்லாமல் நடந்து வந்ததால் அவனுக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். இவளை எங்கே பார்த்தது போல இருக்கிறதே? என்று நினைத்துக் கொண்ட அந்த மோகன் அப்போது அவள் தன் கை சட்டையை மேலே தூக்க அதிலிருந்து 50 ரூபாய் தாள் கீழே விழுந்தது .

அம்மா … அம்மா … என்று அந்தப் பெண்ணை அழைக்க சட்டென்று திரும்பாமல் சாவகாசமாக திரும்பி இருந்த அந்த பெண் இது நம் கோயிலுக்கு எதிரே வீதியில் குடியிருந்த குடும்பம் தானே ?அந்த பெண் தானே இவள்? என்பதை உறுதி செய்த மோகன்

உங்க ஐம்பது ரூபாய் கீழே விழுந்துடுச்சு என்று சொன்னபோது

ரொம்ப நன்றி சார் என்று மோகனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

மோகனை அவள் மறந்துவிட்டிருக்கிறாள்.

ஆனால் மோகனுக்கு அவர்கள் குடும்பமே புகைப்படம் எடுத்து மாட்டியது போல் அவ்வளவு ஞாபகம் இருந்தது.

இந்த மனிதர்கள் கடைசிவரையும் இப்படித்தான் வாழப் போகிறார்களா? அவனவன் கார் பங்களா, பிளாட், வில்லா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் இந்த வெட்ட வெளியில் மொட்டை வானமும் தான் அவர்களுக்கு சொத்தா? இது என்ன மனநிலை என்று தெரியவில்லையே? என்று புலம்பிக் கொண்டே சென்றான்.

இன்னொரு விஷயமும் அவன் நெத்தியில ஆணி அடித்தது போல் பதிந்தது. அந்தப் பெண் கீழே தவற விட்டு ஐம்பது ரூபாயை நாம் பார்க்கவில்லை என்றால் வேறொரு ஆள் எடுத்திருப்பார். இந்தப் பெண்ணின் பணம் தான் என்பது எடுத்து இருப்பவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நம் கண்ணில் பட்டதால் அதுவும் அந்தப் பெண் சட்டையிலிருந்து கீழே விழுந்ததால் நாம் சொன்னோம். இல்லையென்றால் அந்த 50 ரூபாய் அவருக்கும் அந்தக் குடும்பத்திற்கும் ஒருவேளை பசியை ஆற்றாமல் போய் இருக்கலாம்.

நம் கண்ணில் பட்டது நல்லது என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான் மோகன்.

வழக்கம் போல அலுவலகம் கிளம்பி தினமும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தான்.

அன்று அவன் கண்ட காட்சி அவன் மனதையே உலுக்கியது. மொத்த குடும்பமும் அந்த விளிம்பு நிலை மனிதர்கள் கோயில் வாசலில் நின்று விட்டார்கள்.

ஐயா நீங்க கீழ கிடந்த 50 ரூபாய நான் தொலைச் சிட்டேன்னு என்னை எடுக்க சொன்னீங்க. ஆனா உங்க மணிப்பர்ஸ் தவறவிட்டது என்பதைக் கவனிக்கல. நான் எடுத்துட்டு திரும்பும் போது உங்களுடைய மணி பர்ஸ் கீழே விழுந்தது .

அதை எடுத்துப் பார்த்தோ உங்களுடைய போட்டோ இருந்தது ? யாரை வேணும்னாலும் மறந்திடுவோம் .

உங்களை எப்படியா நாங்க மறக்கிறது. அப்போதுதான் தன் மணிப்பர்ஸ் காணாமல் போயிருந்த ஞாபகம் அவனுக்கு வந்தது. அந்த மணிபர்சில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தது. அது தவிர கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்ற அத்தனையும இருந்தது

இவர்கள் நினைத்திருந்தால் இது அத்தனையும் வைத்து . என்னிடம் சொல்லாமல் .இதை மறைத்து இருக்கலாம். ஆனால் இந்த மனிதர்கள் . அப்படியல்ல ஒரு மனிதனுக்கு நெஞ்சார உண்மையாக நாம் நல்லது செய்தால் அவர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்பதற்கு இந்த விளிம்பு நிலை மனிதர்கள் தான் உதாரணம் என்று நினைத்துக் கொண்ட மோகன் ரொம்ப நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.

மறுநாள் அந்த மனிதர்களைக் கூப்பிட்டுக் கொண்டு வீதி வழியே நடந்தான் மோகன்.

எங்க சார் கூட்டிப் போறீங்க? என்று அந்த கணவனும் மனைவியும் கேட்க. சும்மா வாங்க என்று அழைத்துப் போனவன், ஒரு வாடகை வீட்டில் அந்த குடும்பத்தை குடியமர்த்தினான்.

சார் எங்க கிட்ட அட்வான்ஸ் கொடுக்க பணமில்ல., வாடகை கொடுக்கிறது கஷ்டமா இருக்கும் என்ற அந்த கணவனும் மனைவியும் சொல்ல,

வருத்தப்படாதீங்க அட்வான்ஸ் நான் கொடுத்துட்டேன். கணவனுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் நான் வீட்டு வாடகை கொடுத்துடுகிறேன். முதல்ல இந்த குழந்தைகளும் நீயும் குளிச்சு சுத்தமா இருங்க .அதுதான் மனித வாழ்க்கை என்று அவர்கள் கையில் கொஞ்சம் பணத்தையும் திணித்து விட்டு சென்றான் மோகன்.

நடப்பது கனவா ? இல்லை நனவா? என்று வியந்த கணவனும் மனைவியும் கோயில் இருக்கும் திசையை விட்டுவிட்டு மோகன் நடக்கும் திசையை நோக்கி வணங்கினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *