ராணிப்பேட்டை, நவ. 6–
ராணிப்பேட்டை மாவட்டடம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் விளாப்பாக்கம்- சின்னத்தக்கை சாலை மருத்துவாம்பாடி வரையில் 1.87 கி.மீ நீளத்திற்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா பார்வையிட்டு சாலையின் அகலத்தை ஆய்வு செய்தார்கள். பின்னர் சாலை ஓரம் இருபுறமும் மண் கொட்டி சாலை சேதம் அடையாமல் இருக்குமாறு பணிகளை முறையாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சபாண்டவர் மலைக்குச் செல்லும் சாலையில் உள்ள தேவதாசி நீர்வரத்து கால்வாய் வழியாக பாலமதி மலையில் இருந்து விளாப்பாக்கம் பெரிய ஏரிக்கு நீர் செல்லும் சாலையின் கல்வெட்டில் தூர்வாரிட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து விளாப்பக்கம் பெரிய ஏரியினை பார்வையிட்டார்கள். ஏரிக்கரையில் மண் சாலை உள்ளதால் ஏரிக்கரை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு மாற்றாக தார்சாலை அமைத்துக் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பேரூராட்சி திட்ட நிலையில் இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட கிளை நூலகம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்கள். இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சின்ன உப்புப்பேட்டை சாலையில் பேரூராட்சியின் கழிவு நீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆற்காடு-ஆரணி சாலையில் தாதன்குட்டை பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் குளம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தினை பார்வையிட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், மையத்தின் செயல்பாடுகளையும், மண்புழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வினில் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் ஞானசுந்தரம், பேரூராட்சி தலைவர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுனன், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.