செய்திகள்

விளாடிவாஸ்டோக்-சென்னை கடல்வழி திட்டம்


ஆர். முத்துக்குமார்


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், எரிபொருள் செலவின் காரணமாக தற்போது இந்தியாவுக்கான நிலக்கரி ஏற்றுமதி குறைந்துள்ளது. இதற்காக ரஷ்யா, விளாடிவாஸ்டோக் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு புதிய கடல்வழி பாதையில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் திட்டத்தை முன்வைத்து இருக்கிறது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல் வந்தடைய 45 நாட்கள் ஆகின்றது. ஆனால், விளாடிவாஸ்டோக்கில் இருந்து சென்னைக்கு 15-20 நாட்களில் சரக்கு கப்பல் வந்தடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம், கால மற்றும் செலவு மிச்சம் அடைய உதவுகின்றது. இதில் நிலக்கரி மட்டுமல்லாது, கச்சா எண்ணெய், திரவ இயற்கை வாயு, உரங்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மாஸ்கோவில் சமீபத்தில் கூட்டம் நடத்திய போது, பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

“17-ம் நூற்றாண்டிலேயே குஜராத்தை சேர்ந்த வணிகர்கள் ரஷ்யாவின் அஸ்ட்ராகான் நகரில் குடியேறினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மும்பை – ரஷ்யாவின் அஸ்ட்ராகான் துறைமுகங்கள் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. விரைவில் இந்தியாவின் சென்னை – ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் துறைமுகங்கள் இடையே புதிய கடல்வழி போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.”

இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெறக்கூடியதாக இருக்கும். அதேசமயம், 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக அமையும் என்று மோடி தனது உரையில் மீண்டும் வலியுறுத்தினார். “நாம் அமைதியை முன்னிறுத்துகிறோம். எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். உலகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்தியா முதல் நபராக களமிறங்குகிறது. உலகத்தின் எதிர்பார்ப்புகளை இந்தியா பூர்த்தி செய்து வருகிறது,” என்றார்.

இந்த புதிய கடல்வழி பாதை திட்டம், இந்திய-ரஷ்யா இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் துல்லியமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய திட்டம் நிறைவேறிய பின்னர் இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்கள், ஜவுளி, மின்னணு பொருட்கள், வேளாண் கருவிகள் போன்றவை அதிக அளவில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி வருமானமும் வளர்ச்சி காணும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *