செய்திகள்

விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல், பிரியங்கா, எம்.பி.க்கள் கைது

தமிழகத்தில் தலைவர்கள் கைது

டெல்லி, ஆக. 5–

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தர்ணா போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் 25 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

70 ஆண்டு காத்த ஜனநாயகத்தை 8 ஆண்டுகளில் பாஜக சிதைத்துவிட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும், ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் பிற இடங்களில் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.

ராகுல் கைது

இந்நிலையில் இன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வாளகத்திற்குள்ளே கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அந்த பகுதியில் 144 தடை போடப்பட்டிருந்ததால் தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையில் பிரியங்கா காந்தி தலைமையில் கருப்பு உடை அணிந்து மகளிர் அணியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். அங்கிருந்து பேரணியாக பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றிகையிட பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் அணியினர் முயன்றனர். இதைத் தொடர்ந்து பிரிங்கா காந்தி உள்ளிட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

ஜனநாயக

ஆட்சி இல்லை

டெல்லியில் இந்த போராட்டத்திற்கு முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு கல்லாக அடுக்கி கட்டிவைத்த நாட்டின் ஜனநாயகத்தை கடந்த 8 ஆண்டுகளில் பாஜக சிதைத்துவிட்டது. இந்தியாவில் ஜனநாயகம் செத்து வருகிறது. மக்கள் பிரச்னைகள் இந்த அரசு புறக்கணிக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயக ஆட்சி இல்லை. மாறாக நான்கு பேரின் சர்வாதிகார ஆட்சி தான் உள்ளது. இந்த அரசுக்கு எதிராக யாராவது பேசினால் அவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்றார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, என்னை அவர்கள் கைது செய்தால் அதற்கு மிகவும் மகிழ்ச்சி அடையும் நபராக நான் தான் இருப்பேன்” என்றார்.

விலைவாசி உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் சென்னை, திருச்சி நாகர்கோவில், ராமநாதபுரம், காரைக்குடி, தூத்துக்குடி, அந்தியூர், நாமக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் புதுச்சேரியிலும் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக பேரணியாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.