செய்திகள்

விலைவாசி உயர்வால் மக்கள் அவதி ; கும்பகர்ணன்போல தூங்கும் அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 24–

விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருவதாகவும், ஆனால் கும்பகரணன் போல் மத்திய அரசு தூங்குவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

சமீபத்தில் கிரி நகரில் உள்ள காய்கறி சந்தைக்குச் சென்றபோது, உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் படும் அவதியும், அவர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் இல்லத்தரசிகளுடன் ராகுல் காந்தி உரையாடிய விடியோ பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:–

சில நாட்களுக்கு முன்னர் உள்ளூர் காய்கறி சந்தைக்குச் சென்றிருந்தேன். வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது, சாமானியர்களின் நிதிநிலை எவ்வாறு மோசமடைந்து வருகிறது, பணவீக்கம் எவ்வாறு அனைவரின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை அறிய விற்பனையாளர்களிடம் உரையாடினேன். மக்கள் விலைவாசி உயர்வால் அவதியடைந்த வருகின்றனர். அன்றாட தேவைகளின் சிறு விஷயங்களில்கூட மக்கள் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

உணவுப் பொருள்களின் விலையேற்றம் குறித்த மோடி அரசைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. புல்லட் ரெயில் கொண்டு வருவதைப் பற்றிப் பேசும் மோடி அரசு, புல்லட் ரெயிலின் வேகத்தை விட வேகமாக உயர்ந்துவரும் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

மக்கள் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பூண்டு, பட்டாணி, காளான் மற்றும் பிற காய்கறிகளின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இவ்வாறு உயர்ந்துகொண்டே சென்றால் சாமானியர்கள் என்ன சாப்பிடுவார்கள், எதைச் சேமிப்பார்கள் என்று யோசிக்க வேண்டி உள்ளது.

ஒருகாலத்தில் ரூ.40 ஆக இருந்த பூண்டு விலை தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. பணவீக்கம் சாமானியர்களின் சமையல் அறையை மோசமாக்கிவிட்டது. விலையேற்றத்தால் மக்களின் தினசரி வாழ்க்கை கடினமாகிவிட்டது. ஆனால், மத்திய அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை. கும்பகரணனை போன்று தூங்குகிறது.அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஓராண்டில் மாவு, எண்ணெய், மசாலாப் பொருள்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றின் விலைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பொருளாதாரத்தைக் கையாளுவதில் பாஜக அரசைக் காங்கிரஸ் கடுமையாக தாக்கி வருகிறது. அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்து கவலையளிப்பதாகவும் அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *