செய்திகள்

விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஆக. 16–

விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் வழிகாட்டுதலின்படி மழைக்காலத்தில் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, எலிக்காய்ச்சல் மற்றும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் டைபாய்டு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

மேலும், டெங்கு, வயிற்றுப்போக்கு, டைபாயிடு போன்ற நோய்கள் பரவா வண்ணம் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

அதில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து உயிர்காக்கும் தடுப்பு மருந்துகள் மற்றும் ரத்த அணுக்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பரிசோதனை வசதிகள் போதிய அளவில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது.

முகாம்களில் சுகாதாரமான உணவு, கிருமிநாசினி செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க தேவையான கிருமி நாசினிகள் தெளிக்கப்படவேண்டும்.

மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றிடவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கவும், தீவிரப்படுத்தப்படவேண்டும்.பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக போதிய அளவு குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதன் பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது. 95.96 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 89.44 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

டெங்கு, மலேரியா டைபாய்டு உள்ளிட்ட மழைக்கால நோய்களால் 2017 ல் தான் அதிகபடியானவர்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 1.5 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள்.

25 ஆரம்ப சுகாதார நிலையம், 25 சுகாதார நிலையம் என மொத்தமாக 50 சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட இருக்கிறார்.

தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்ததால் தற்போது 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. மிக விரைவில் தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.