செய்திகள் நாடும் நடப்பும்

விரைவில் நவீன சென்னை

Makkal Kural Official

தலையங்கம்


சென்னைக்கு அருகில் ஒரு புதிய நவீன நகரம் உருவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக நகர்ப்புற வளர்ச்சியில் புதிய மைல்கல் ஆகும்.

கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டம், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் (TIDCO) முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இது அதிகரித்து வரும் நகரமயமாக்கலால் எழுந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு முன்னணி ஸ்மார்ட் நகரமாக சென்னை வளரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் வேகமாக நகர்மயமமாக காரணம் படிப்பிற்க்காகவும், பணிகளுக்காகவும் இந்த நகரங்களுக்கு பெருமளவில் பின் தங்கிய பகுதிகளில் இருந்து குடியெயர்தலால்தான் என்பதை அறிவோம்.

மின் விளக்குகள், குடிநீர், சாலைகள், கழிவு நீர் முகாமை, போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவைகளை விரிவாக்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன.

நகர்ப்புற திட்டமிடுதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக, சீரற்ற வளர்ச்சிக்கு பதிலாக ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், நிதி தொழில்நுட்ப மண்டபங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மாநாட்டு அரங்குகள் போன்றவைகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், அரசு மற்றும் தனியார் கல்வி, மருத்துவ நிறுவனங்களும் இதில் அடங்கும்.

அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏற்றவாறு பல்தள குடியிருப்புகள் அமைக்கப்படும். பசுமை ஆற்றல், நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் ஓய்வுமிடங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சென்னையுடன் இந்நகரம் ஒருங்கிணைக்கப்படுவதற்காக விரிவான சாலை அமைப்பு, விரைவு பேருந்து சேவைகள் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்து, நகரப் போக்குவரத்தை மேம்படுத்த முடியும்.

உலக நகரத் திட்டம், எதிர்கால நகர்ப்புற சவால்களை சமாளிக்க சென்னையின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும். தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நட்பு வளர்ச்சி மற்றும் இணைந்த போக்குவரத்து ஆகியவற்றை கொண்டு, இது பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.

TIDCO விரைவில் முதல் கட்ட பணிகளைத் தொடங்க உள்ள நிலையில், இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒரு முன்னோடியாக சென்னையை மாற்றும் பெரும் முயற்சியாக இது அமையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *