செய்திகள்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 23–

விருதுநகரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

சட்டசபையில் இன்று விருதுநகர் பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை தேவை. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனையை வழங்கி உள்ளோம்’ என்றார்.

இந்தியாவுக்கே முன்மாதிரி வழக்கு

இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ‘விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிடுகிறேன். 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிடுகிறேன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறோம் என்பதைப் பாருங்கள். வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். எப்படி விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.