செய்திகள்

விரக்தியில் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு

பொய் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்

விரக்தியில் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு

கோரப்பசியில் தி.மு.க; எச்சரிக்கையாக இருங்கள்

பாலக்கோடு, மார்ச் 22–

விரக்தியில் ஸ்டாலின் வார்த்தைகளை கொட்டுகிறார். பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார்.

ஊர் ஊராக போய் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் ஸ்டாலின். அவரது கனவு பலிக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நேற்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தர்மபுரி மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தார்கள். முதலமைச்சரின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முதலமைச்சர் சொன்னபோது மக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

இன்று ஓசூர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, தளி தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் டாக்டர் சி.நாகேஸ்குமார் ஆகியோரை ஆதரித்து ஓசூரில் பேசினார்.

default

இதன் பின்னர் அண்ணா தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான கே.பி. அன்பழகனை ஆதரித்து பாலக்கோட்டில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அண்ணா தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வலிமையான கூட்டணி. இது வெற்றி கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் கே.பி.அன்பழகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்.

தி.மு.க. கோரப்பசி

உழைத்தால் தான் வெற்றி பெற முடியும். விவசாயிகள் உழைத்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே எல்லாம் உழைப்பு தான். ஒருவன் 4 நாட்கள் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படி இருக்கும். பசியுடன் அவன் சாப்பிட்டான் என்றால் அவன் எப்படி சாப்பிடுவான். அதேபோல 10 வருடமாக தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இல்லை. தப்பித்தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களையே விழுங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு கோர பசியில் இருக்கிறார்கள்.

விரக்தியில் ஸ்டாலின் வார்த்தைகளை கொட்டுகிறார். பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசுகிறார். எடப்பாடி கிராமத்திலிருந்து வந்தவன், விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன், எப்படி தாக்குபிடிக்க முடியும் என்று ஸ்டாலின் நினைத்தார். ஒரு மாதத்தில் இந்த ஆட்சி முடிந்து விடும், 3 மாதத்தில் காலியாகி விடும்; 6 மாதத்தில் காலியாகி விடும் என்று ஸ்டாலின் கனவு கண்டார். ஆனால் அந்த கனவு பகல் கனவாகி விட்டது. எனவே தான் ஸ்டாலின் துடிக்கிறார். ஏதாவது பொய் சொல்லி மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அவருக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுங்கள்.

ஸ்டாலின் கொடுத்த தொந்தரவு

நான் முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கொடுத்த தொந்தரவு கொஞ்சநஞ்சமல்ல. நிம்மதியாக இருக்க விடவில்லை. போராட்டங்களை எல்லாம் தூண்டிவிட்டார். எப்படியாவது சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது முயற்சி நடக்கவில்லை.

மத்தியிலும் மாநிலத்திலும் கருணாநிதியின் குடும்பம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த போது கொள்ளையடித்த குடும்பம் கருணாநிதி, ஸ்டாலின் குடும்பம்.

ஜாதி மத சண்டை இல்லை

சிறுபான்மை மக்களுக்கு அண்ணா தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். எம்.ஜி.ஆர், அம்மா தலைமையிலும், என் தலைமையிலும் அண்ணா தி.மு.க. ஆட்சி 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்திருக்கிறது. ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். ஜாதி மத சண்டைகள் எதுவும் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களிடம் ஓட்டு வாங்க பொய் சொல்லி வருகிறார் ஸ்டாலின். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று பொய் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.

அண்ணா தி.மு.க. கட்சியும் அரசும் தான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும். பாதுகாப்பு அரணாக இருக்கும். பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்கும் ஸ்டாலின் முயற்சி பலிக்காது. (சிறுபான்மை மக்களுக்கு அண்ணா தி.மு.க. அரசு செய்த உதவிகள், திட்டங்களை பட்டியல் போட்டு காட்டினார்).

அண்ணா தி.மு.க. ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். 234 தொகுதிகளிலும் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மக்கள் வைத்த கோரிக்கைகளை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறோம். (பாலக்கோட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு மக்களிடம் எடுத்துரைத்தார்).

ஸ்டாலினை தோற்கடிப்பதே குறிக்கோள்

எனக்கு தொண்டையில் புண்ணாகி விட்டது. இருந்தாலும் ஸ்டாலினை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அது தான் எனது குறிக்கோள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஓசூரில் பேச்சு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:–

ஒசூர் சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற நமது வெற்றி வேட்பாளர் சகோதரி எஸ். ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள். இந்த ஒசூர் சட்டமன்ற தொகுதி ஏற்றம் பெற, தொழில் வளம் சிறக்க, உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றும் ஒரு திறமையான வேட்பாளர் இங்கு போட்டியிடுகிறார்.

அதேபோல, தளி சட்டமன்ற தொகுதியில் நமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் சகோதரர டாக்டர் சி. நாகேஷ்குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள். இவர் பிரதமர் ஆசி பெற்ற வேட்பாளர். இந்த தளி சட்டமன்ற தொகுதி வளம் பெற, சிறக்க, மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

ஒசூரை பொறுத்தவரையில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தமிழ்நாட்டிலேயே மிக முக்கியமான நகரங்களில் ஒன்று ஒசூர் நகரம். இந்த தொகுதியில் தொழில் சிறக்க, பொருளாதாரம் வளர அம்மாவின் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி, புதிய புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில்கள் பட்டியல்

அம்மா 2015–ம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினார். அதன் மூலம் டெல்டா எலக்ட்ரானிக்ஸ், லோட்டஸ் புட்வியர், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.5000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, 13,000 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர அம்மா நடவடிகை மேற்கொண்டார். லோட்டஸ் புட்வியர் நிறுவனத்தில் மட்டும் ரூ.400 கோடியில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

அதேபோல, 2019ல் அம்மா வழியில் நடைபெறுகின்ற அம்மாவின் அரசு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தியது. அந்த மாநாட்டில் 304 தொழில் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் ரூ.600 கோடி மதிப்பீட்டில் 1000 பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதேபோல, ஒசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் 18,250 பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாக செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முதற்கட்டமாக ரூ.4,700 கோடி முதலீட்டில் துவங்கப்படவுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்கள் முறையே தலா ரூ.5,000 கோடி வீதம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தந்த அரசு அம்மாவின் அரசு.

அதே போல ஒசூரில் ரூ.2,400 கோடியில் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், சோலார் எனர்ஜி எலக்ட்ரானிக் மொபிலிட்டி என்ற நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ உள்ளது. 2019ம் ஆண்டு மைலோ நிறுவனம் கோவிட்–க்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஆதர் எனர்ஜி நிறுவனம் மூலம் சுமார் ரூ.600 கோடியில் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் மின்கலம் தயாரிக்கும் நிறுவனமும் இரண்டு கட்டமாக தொழில் தொடங்க உள்ளனர். இப்படி பல தொழில்கள் வருவதற்கு அம்மாவுடைய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஸ்டாலினுக்கு புள்ளி விவரங்களுடன் பதில்

எதற்காக இதையெல்லாம் சொல்லுகின்றேன் என்றால், ஸ்டாலின் அண்ணா தி.மு.க ஆட்சியில் புதிய தொழில் துவங்கப்படவில்லை என்ற தவறான செய்தியை தொடர்ந்து பேசி வருகின்றார். நான் சொன்ன தொழிற்சாலைகள் அனைத்தும் ஒசூர் பகுதியில் வருவது. நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழில்கள் எல்லாம் ஒசூரில் துவங்கும் போது சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது சாதரண விஷயம் அல்ல, சாதனை. கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள படித்த இளைஞர்களுக்கு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, தொழில் வளர்ச்சி அடைந்த பகுதியாக இருக்கும்.

ஒசூர் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி. ஏனென்றால், பெங்களூரு நகரத்திற்கு அதிகமான வாகனங்கள் செல்கின்றது.

ஜூஜூ வாடியில் இருந்து வேப்பனஹள்ளி வரை 18 கி.மீ. ரூ.220 கோடியில் நிலம் எடுக்கின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஓசூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் 220 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதையும் அம்மாவின் அரசு திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. ஓசூர் மாநகரத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நான் தெரிவித்தேன். கொடியாளம் அணைக்கட்டிலிருந்து 25 ஏரிகளுக்கு நீரேற்று மூலமாக தண்ணீர் நிரப்புகின்ற போது அந்த பகுதி விவசாயிகளுக்கு நீர் கிடைக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மலர் உற்பத்தி அதிகம் இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள் எல்லாம் மலர்களை பெங்களூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சர்வதேச மலர் ஏலம் மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிக் கொண்டு இருக்கிறோம். இதனால் அந்த மலர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் இந்த சர்வதேச மலர் ஏல மையத்திற்கு மலர்களை கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.

பிரமாண்ட சந்தை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகள், பழங்கள் தான் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இப்படி விளைகின்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்காக அம்மாவின் அரசு ஓசூர் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான காய்கறி சந்தை அமைத்து தர இருக்கிறோம்.

அண்ணா தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எல்லா குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 கியாஸ் சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1500 ரூபாய் வழங்கப்படும். கேபிள் டிவி இணைப்பு இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும். உழவு மானியமாக 7500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் லைசன்ஸ் வழங்கப்படும். ஏழை மக்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அம்மாவின் அரசு உதவி செய்யும். இதுபோன்ற திட்டங்கள் அம்மாவின் அரசால் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *