செய்திகள்

வியாழனின் 3 துணைக்கோள்களை ஆராய சென்ற ‘ஜூஸ்’ விண்கலம்

லண்டன், ஜூன் 22–

வியாழனின் துணைக்கோள்களை ஆராய அனுப்பப்பட்ட ‘ஜூஸ்’ விண்கலம், 2031 இல் அங்குள்ள கடல்களை படம் எடுத்து அனுப்ப உள்ளது.

நமது சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் வியாழன். இதன் நிறை, சூரியக் குடும்பத்தின் மற்ற எல்லா கோள்களின் கூட்டு நிறையை விட அதிகமானது. வியாழன் 80க்கும் மேற்பட்ட துணைக்கோள்களை உடையது. அவற்றில் மிகப் பெரியவை, ‘கானிமேட், காலிஸ்டோ, யுரோப்பா’ ஆகியவை. இவற்றை ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஏப்ரல் மாதம் ‘ஜூஸ்’ விண்கலத்தை அனுப்பியது.

மேற்கண்ட துணைக்கோள்களின் உறைந்த பகுதிகளில் நீர் உள்ளதா என்றும், உயிர்கள் உள்ளனவா என்றும் ஆராய்வது இந்த விண்கலத்தின் முக்கியப் பணி. இந்த விண்வெளிப் பயணத்தின் இலச்சினையை, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த யாரைனா என்ற 10 வயதுச் சிறுவன் உருவாக்கினார்.

2031 இல் படங்கள் அனுப்பும்

2031ம் ஆண்டு வியாழனை அடையும் இந்த விண்கலம், மூன்றரை ஆண்டுகள் வியாழனைச் சுற்றி வரும். பின்னர் மூன்று துணைக்கோளுக்கு அருகில் பறக்கும். கேமரா, ராடார், ஸ்பெக்டோமீட்டர் முதலிய கருவிகளுடன் செல்லும் இந்த விண்கலம், மூன்று துணைக்கோள்களின் மேற்பரப்பை ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பும்.

3 துணைக்கோள்களிலும் பனிப்பாறைகளுக்குக் கீழே கடல் உள்ளது என்றும், அதில் உள்ள நீரின் அளவு பூமியில் உள்ளது போன்று இருமடங்கு அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் அங்கு உயிர்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது என்று கருதுகிறார்கள். இந்த அனுமானங்களின் உண்மைத் தன்மையை அறிவதே இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *