சிறுகதை

வியாபார நுணுக்கம் – ராஜா செல்லமுத்து

அந்தப் பிரதான வீதியில் இருக்கும் அத்தனை மக்களுக்கும் பெரிய பலசரக்கு கடை எது என்றால் முருகன் கடை தான்.

முருகன் பலசரக்கு கடை தான் அங்கு பிரபலம். அங்கு சமையல் செய்வதற்கான எந்தப் பொருளும் இல்லை என்று சொல்லுமளவிற்கு அடுக்கி வைத்திருந்தார்கள்.

உப்பு முதல் ஊறுகாய் வரை அத்தனையும் அங்கு சௌகரியமாக கிடைக்கும் பெரிய மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்குக் கிடைப்பதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் எல்லாம் முருகன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவார்கள்.

அங்கு ஒருமுறை வாடிக்கையாளர் ஆகிவிட்டால் மற்ற கடைகளுக்கு யாரும் செல்ல மாட்டார்கள். அவ்வளவு அனுசரணை, அவ்வளவு பொறுப்பு , வியாபாரத்தில் கனிவு, பேச்சில் தெளிவு, வாடிக்கையாளர்களை மதிக்கும் பண்பு என்று முருகன் பலசரக்குக் கடை உரிமையாளர் அத்தனைபேரையும் அரவணைத்துச் செல்வார்.

அதனால் மற்ற கடைகளை எல்லாம் விட முருகன் பலசரக்கு கடையில் வியாபாரம் களைகட்டி நிற்கும் .இதைப் பார்த்து பக்கத்து கடைக்காரர்கள் கொஞ்சம் பொறாமைப்படுவார்கள்.

எப்படி இவர்களால் இவ்வளவு கூட்டத்தை சேர்த்து வியாபாரம் செய்ய முடிகிறது? மற்ற கடைக்காரர்களும் முருகன் பலசரக்குக் கடையை போல பொருட்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் வியாபாரம் என்பது மற்ற கடைகளை விட முருகன் பலசரக்குக் கடைகளில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதன் சூட்சுமம் என்னவென்று மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தது ; மற்ற கடைக்காரர்களும் தான் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அனுசரணையோடு பார்த்துக்கொள்கிறார்கள்.

கவர்ச்சியான விளம்பரங்கள் கொடுக்கிறார்கள் . ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருளும் கொடுக்கிறார்கள்.

ஆனால் முருகன் கடையில் மட்டும் ஏன் இவ்வளவு வியாபாரம் இருக்கிறது ? என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மற்ற கடைக்காரர்களும் வாடிக்கையாளர்கள் மீது அன்பும் அனுசரணையுமாகத்தான் தான் நடத்துகிறார்கள். இருந்தபோதிலும் அந்த கடையை முறியடிக்க முடியவில்லை என்று மற்ற கடைக்காரர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்.

மற்றொரு கடையில் பொருட்கள் வாங்கும் ஆட்கள் கூட சில நேரங்களில் முருகன் கடையில் பல பொருட்களை வாங்கி வீட்டுக்கு செல்கிறார்கள்.

ஆனால் முருகன் பலசரக்குக் கடையில் பொருட்களை வாங்கும் எந்த ஒரு ஆட்களும் மற்ற கடையில் மற்ற பொருட்களை வாங்க முடியவில்லை.

அப்படி என்ன அவ்வளவு பொருட்களை வைத்திருக்கிறார்கள் . இது என்ன வியாபார நுணுக்கம் ஒருவேளை வாடிக்கையாளர்கள் எல்லாம் நம் கடைக்கு தான் வரவேண்டும் என்று ஏதாவது செய்வினை வைத்திருக்கிறார்களா? என்று கூட பக்கத்து கடைக்காரர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள் .

எவ்வளவோ முயன்று பார்த்தும் முருகன் பலசரக்கு கடை அவர்களால் முறியடிக்க முடியவில்லை.

அதற்கு காரணம் என்னவென்று ஆராய ஆரம்பித்தார்கள்.

பலசரக்கு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் எல்லா பொருட்களும் முருகன் கடையில் இருக்கும் .ஆனால் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு பொருள் இல்லை என்று தெரிந்தால், பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அந்தப் பொருள் இல்லை என்று கடைக்காரர்கள் செல்வதில்லை.

மாறாக கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை அனுப்பி இல்லாத பொருளை அருகில் இருக்கும் கடையில் இருந்து வாங்கி வரச் சொல்வார்கள்.

இதை கவனித்த பக்கத்து கடைக்காரர்கள் முருகன் பலசரக்கு கடைக்கு ஏன் இவ்வளவு ஆட்கள் போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டார்கள். அருகில் இருக்கும் கடைக்காரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதிலிருந்து, முருகன் பலசரக்குக் கடையின் சூட்சுமம் தெரிந்தது .

நாமெல்லாம் பலசரக்கு சாமான்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஒரு பொருள் இல்லை என்றால் இந்த பொருள் எங்களிடம் இல்லை என்று கழித்துவிட்டு தான் மற்ற பொருட்களை கொடுப்போம். அவர்களும் வேறு ஒரு கடையை பார்த்து இல்லாத பொருட்களை வாங்கிப் போவார்கள்.

அதனால் அந்த வாடிக்கையாளர் வேறொரு கடைக்கு போக கூடிய சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். அப்படி அவர்கள் போகும்போது அந்தக் கடைக்காரர்களிடம் கனிவாகப் பேசி, அவர்களின் நடவடிக்கை பிடித்துவிட்டால் அடுத்த முறை வரும்போது மொத்த பொருளையும் அந்த கடையிலேயே வாங்கிக் கொள்வார்கள் ; நாம் நிராகரிக்கப்படுகிறோம் என்பதைக் கண்டுகொண்டார்கள்..

ஆனால் முருகன் பலசரக்கு கடையில் இருக்கும் ஆட்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருள் இல்லை என்றால் அவர்களை மற்ற கடைக்கு அனுப்பாமல் , அதில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்ற கடைக்குப் போய் பொருட்களை வாங்கி கொண்டு வந்து கொடுக்கும் போது அந்த வாடிக்கையாளர் இன்னொரு கடைக்கு போக வேண்டிய சூழல் ஏற்படுவதில்லை.

அந்தக் கடையில் இருக்கும் ஆட்களைச் சந்தித்துப் பேச வேண்டியதில்லை. அந்தக் கடையின் சூழல் தெரியவில்லை. மொத்த வாடிக்கையாளரின் கவனத்தையும் முருகன் பலசரக்கு கடை இழுத்து வைத்திருப்பதால் அவர்கள் எந்த கடைக்கும் போவதில்லை . இதுதான் முருகன் பலசரக்கு கடை வியாபாரத்தின் சூட்சுமம் .நாமெல்லாம் வாடிக்கையாளர் கேட்கும் பொருள் இல்லை என்றால் இல்லை என்று சொல்லி விட்டு மற்ற பொருட்களை கொடுக்கிறோம்.

ஆனால் முருகன் பலசரக்கு கடை அப்படி இல்லை . அதுதான் அவர்கள் வியாபாரத்தின் வெற்றி.

அதுதான் அந்தக் கடைக்கு வாடிக்கையாளர்கள் அத்தனை பேர் செல்கிறார்கள் என்று பக்கத்து கடைக்காரர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது,

முருகன் பலசரக்கு கடையில் இருந்து வந்த ஒரு ஊழியர், துவரம் பருப்பு 20 கிலோ கொடுங்க என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

எதற்கு ? என்று அருகிலிருந்த கடைக்காரர் கேட்க

கஸ்டமருக்கு கொடுக்கணும். எங்க கடையில இல்ல என்ற அந்த ஊழியர் சொன்னபோது,

மற்ற கடைக்காரர்களுக்கு இதுதான் வியாபார உத்தி. முருகன் பலசரக்குக் கடையைப் போல நாமும் அவர்களை மதித்து நடந்து கொண்டால் வியாபாரமும் விண்ணைத் தொடும் என்று நினைத்தபடியே அந்த ஊழியருக்கு அந்தப் பருப்பை அளந்து கொடுத்துக்கொண்டிருந்தார் அந்தக் கடைக்காரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *