சிறுகதை

வியாபார உத்தி | ராஜா செல்லமுத்து

ஆண்டவர் கடை என்றால் அந்தப் பகுதி மக்களுக்கு அலாதி விருப்பம். எதையும் இல்லையென்றே சொல்ல மாட்டார். எல்லாப் பொருட்களும் அங்கு இல்லாமல் இல்லை. ஒரு ஆளுக்குக் கூட தன் கடைக்கு வந்தவர்களை பொருள் இல்லையென்றே அவர் சொல்வதில்லை. இதற்கும் அவர் கடையொன்றும் அவ்வளவு பெரியதல்ல. சிறிய கடை தான் என்றாலும் எல்லாம் சிறப்பு. வழக்கம் போலவே வாடிக்கையாளர்களும் கடை முன்னே குவிந்து கிடந்தனர்.

“ஆண்டவர் அண்ணே”

“அரிசி ஒரு சிப்பம்”

“ம்”

“சமையல் சாமான்கள்”

“சமையல் சாமான்கள்ன்னா என்ன என்ன வேணும்னு சொல்லுப்பு” என்று அசட்டுச்சிரிப்புச் சிரித்தார். ஆண்டவர்.

சமையல் சாமான்கன்னா எல்லாம் தான் என இழுத்தார் பெருமாள்.

“ஓ.கோ லிஸ்ட் போடலையோ?’’

“ஆமா ”

“சரி போய் வீட்டுல போயி கேட்டுட்டு வாங்க என்று ஆண்டவர் சொன்னதும் அருகில் இருந்தவர்

“அட நீங்க ஒண்ணு எல்லா வீட்டுலயும் சமையல் சாமான்கள் ஒண்ணு தான். என்ன இதுல கொஞ்சம் மாறுபடலாம். எங்க வீட்டுக்காரம்மா ஒரு லிஸ்ட் போட்டு அனுப்பியிருக்கா அதபாத்திட்டு நீங்களே பெருமாளுக்கும் போட்டிரலாம். என்று இன்னொருவர் சொல்ல ஆண்டவர் அவர் கொடுத்த பொருள்களின் லிஸ்ட்டை வாங்கினார். அரிசி, துவரம் பருப்பு, ஆயில், சோப்பு, ஷாம்பூ, பிளேடு, உ.பருப்பு, பா. பருப்பு, கிஸ்முஸ், கோதுமை, ரவை, நாட்டுச்சக்கரை, என்று பட்டியல் நீண்டது.

ஆண்டவர் லிஸ்ட்டை வாசிக்க வாசிக்க ஆமா ….. ஆமா….. இதே தான் அவ்வளவும் இதேதான் வேணும் என்று பெருமாள் வாய்மலர்ந்தார்.

பெருமாள் சார், இதெல்லாம் இங்க இருக்கிற எல்லார் வீட்டுலயும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று லிஸ்ட் கொடுத்தவர் சொல்ல பெருமாளுக்குள் சந்தோசம் பிரளயமாகப் பிரவாகம் எடுத்தது. இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் நிறையப் பேர் ஆண்டவர் கடை முன்னால் குவிந்தனர்.

பொருள்கள போடுங்க என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்த இந்தா ….. இந்தா ….. என்று ஆண்டவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு சிலர் தங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றனர். ஒருசிலர் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

“குட்டி ஓடிட்டு வா” என்று தன் கடையில் வேலை பார்க்கும் நபரைச் சொல்ல அவன் குடுகுடுன்னு கடையை விட்டு வெளியே ஓடினான்.

அப்புறம் வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?

” ம்….. நல்லா இருக்காங்க”

“முத்தையா ஒன்னோட பொண்ணு இப்ப என்ன படிக்கிற? ”

“பத்தாவது”

“பையன்?

“அவன் எட்டாவது படிக்கிறான்.

ராஜேந்திரன்….. உங்களோட பொண்ணு……?

அவ படிச்சிட்டு வேல பாத்திட்டு இருக்கா

“ம்…..கணபதி ஒங்களோட பையன் படிச்சிட்டு இருந்தானே?

“ஆமா, இப்ப படிச்சு முடிச்சிட்டான். வேலை தேடிட்டு இருக்கான் என்று வாடிக்கையாளர்களிடம் ஆண்டவர் அளவளாவிக் கொண்டிருந்தார்.

பேச்சு நீண்டு கொண்டே இருந்தது. இடையிடையே சில ஆட்கள் பொருட்களை வாங்கிச் சென்றார்கள். கூடி நின்று கொண்டிருந்தவர்களிடம் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார் ஆண்டவர்.

வெளியே போன குட்டி, ஏதோ ஒரு பெரிய பையில் எதையோ தூக்கி வந்தான். அவன் கடைக்குள் வந்தது தான் தாமதம் அப்பெறம் ஒங்களுக்கு என்ன வேணும்? அரிசி கிஸ்மிஸ், பாதாம், எல்லாம் தான் அதான் எழுதிக் குடுத்திருக்கனே என்று ஒருவர் சொல்ல பெருமாள் முதற்கொண்டு அத்தனை பேருக்கும் படபடவென்று பொருட்களைப் போட்டுக் கொண்டிருந்தார் ஆண்டவர். குட்டியும் உடன் வேலை செய்து கொண்டிருந்தான். அதுவரையில் அரட்டையடித்துக் கொண்டிருந்த ஆண்டவர் கருமமே கண்ணாய் இருந்தார்.

ஒரு ஆளைக் கூட நிற்க விடாமல் பொருட்களைக் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் அங்கே நின்று கொண்டிருந்த சுருளி பார்த்துக் கொண்டே இருந்தான்.

பொருட்களை வாங்கியவர்கள் கடையை விட்டு நகர, சுருளி மெல்ல பேச ஆரம்பித்தான்.

“ஏன் ஆண்டவரு, ஒண்ணு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே’’,

சொல்லு சுருளி, நீ கேக்காம பிறகு யார் கேக்கப் போறது.

என்ற ஆண்டவர் பிடி தளர்த்தினான்.

நானும் பாத்திட்டே தான் இருந்தேன். குட்டி வெளிய போகும் போதும் கடையில் நின்னுட்டு இருந்தவங்க கிட்ட பேச்சு குடுக்க ஆரம்பிச்ச. அவன் வந்ததும் பொருள்கள பட்டு பட்டுன்னு குடுக்க ஆரம்பிச்சு ஆளுகள வெரட்டி விட்டுட்டயே ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று சுருளி கேட்ட போது கடகடவெனச் சிரித்தார் ஆண்டவர் .வெளிய செல்லிற மாட்டீங்களே

“இல்ல ”

“இது தான் வியாபார உத்தி சுருளி. நின்னுட்டு இருந்த ஆளுக கேட்ட பொருள்கள்ல பாதிக்கு மேல கடையில இல்ல. பாதிப் பொருள கொடுத்திட்டு மீதிய இல்லன்னு சொல்ல முடியல. அப்படியே பாதிப் பொருள குடுத்திட்டு மீதிய வெளிய வாங்கிக்கன்னா, அப்படி அவங்க வெளிய வாங்கப் போகும் போது அந்தக் கடைக்காரனுக நம்மள வாடிக்கையார்கள் கிட்ட எப்படிப் பேசுவானுகன்னு தெரியல. அப்படி அவனுக பேசுனா நம்ம வாடிக்கையாளர்கள் நம்ம விட்டு போயிருவாங்க. இப்படி ஒன்னு ரெண்டு பொருள்கள் இல்லன்னாலும் அவங்கள அடுத்த கடைகளுக்கு விடக்கூடாது நம்ம வாடிக்கையாளர்கள நம்மகிட்டயே வச்சுக்கிரணும் சுருளி என்று ஆண்டவர் சொன்ன போது சுருளிக்குச் சுரீரென்றது.

“ஆகா” பயங்கரமான ஆளா இருப்பான் போலெருக்கே. சரி சரி நான் கேட்ட நாட்டுக் கருப்பட்டி இருக்கா? இல்ல வாங்கிட்டு வரணுமா?

“இல்ல வாங்கிட்டு வந்தாச்சு என்று ஆண்டவர் சொல்ல நான் ஒன் கடைய விட்டுட்டு வேற எங்கயும் போக மாட்டேன் என்று சுருளி சொல்ல,

” சுருளி, ஒன்னையும் ஒருநாள் நிக்க வச்சு பேசிட்டு தான பொருள் வாங்கிட்டு வந்து குடுத்தேன்” என்று ஆண்டவர் சொன்ன போது சுருளிக்கு சுருக்கென்றது.

ஆண்டவரு நீ பெரிய ஆளா இருப்ப போல. எப்படி வியாபாரம் பண்ணனும்னு ஒன்கிட்ட இருந்து கத்துக்கலாம் . ”

வர்ற ஆளுகள வெளிய விடாம, நம்ம கைக்குள்ளயே வச்சுக்கிரனும்; அப்பதான் நம்ம வியாபாரம் செழிக்கும் என்ற போது இல்லாத பொருளைக் கேட்டு ஒருவர் வந்து நின்றார்.

குட்டி என்று ஆண்டவர் சொல்ல அவன் கடையை விட்டு தலை தெறிக்க ஓடினான்.

சுருளியும் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு நகர்ந்தான்.

ஆண்டவர் அவனுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *