சிறுகதை

வியாபாரம் | ராஜா செல்லமுத்து

இரவு சாப்பிட்டு முடித்ததும் வாழைப்பழம் சாப்பிடுவது பிரகாசுக்கு வழக்கம். அதுபோலவே அந்த இரவு எப்போதும் வாங்கும் வாழைப்பழ வியாபாரியின் தள்ளுவண்டி கடைக்குச் சென்றான் பிரகாஷ்.

அப்போது கடைத்தெருவில் இருக்கும் வண்டி கடையில் இரண்டு ஆட்கள் வாழைப்பழம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ் சென்றபோது அந்த இரண்டு நாட்களும் சென்றுவிட்டார்கள்.

பிரகாஷ் வண்டியில் இருந்த வாழைப்பழங்களை ஒரு பார்வை பார்த்தபின் செவ்வாழை வேண்டுமென்று கேட்டான்.

பழம் கேட்பதற்கு முன்பாகவே ஐம்பது ரூபாய் தாளை கொடுத்தான் பிரகாஷ்.

பழத்தை பிரகாஷ் இடம் கொடுத்த வாழைப்பழ வியாபாரி மீதி பணத்தைக் கொடுப்பதற்குள் ஒரு பணக்கார குரூப் வாழைப்பழ வண்டி அருகே வந்து நின்றது.

வாழைப்பழத்தை வாங்கிய பிரகாஷ் மீதி பணத்தை வாங்க வேண்டும் என்று நின்றுகொண்டிருந்தான்

ஆனால் வாழைப்பழ வியாபாரி மீதிப் பணத்தை தராமல் வந்த பணக்கார வாடிக்கையாளர்களை பார்ப்பதும் அவர்கள் கேட்பதை கொடுப்பதும் என்று இருந்தாரே ஒழிய பிரகாஷின் பாக்கியைத் தரவில்லை

தினமும் வந்து செல்லும் கடை ஆதலால் அவனால் கேட்க முடியவில்லை. நின்று கொண்டே இருந்தான்.

அந்த வாழைப்பழ வியாபாரி அதை சாதகமாக எடுத்துக்கொண்டு பிரகாஷ் கால்கடுக்க நிற்க வைத்தார்

என்ன தான் செய்கிறார் பார்க்கலாம் ? என்று பிரகாஷ் நின்றுகொண்டிருக்க,

அந்த வியாபாரி அந்த பணக்கார வாடிக்கையாளர்கள் மாறி மாறி கேட்கும் பல வகையறாக்களை தொட்டு காண்பிப்பது ரேட் சொல்வதும் ஆக இருந்தார்.

ஆனால் பிரகாஷின் மீதி பணத்தை கொடுக்கவில்லை. அதற்குள் இன்னும் இரண்டொரு பணக்காரர்கள் வந்தார்கள்.

அப்போதும் பிரகாஷின் பணத்தை கொடுக்கவில்லை.

பிரகாஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த பணக்காரர்களிடம் வியாபாரத்திற்கு சென்றுவிட்டார் வியாபாரி.

அந்த பணக்காரர்கள் பேரம் பேசுவதும் வாழைப்பழம் வாங்குவதும் ஆக இருந்தனர்.

அதுவரைக்கும் பொறுமையாக நின்றுகொண்டு இருந்தான் பிரகாஷ்.

அந்தப் பணக்காரர்களுக்கு வாழைப்பழ வியாபாரம் செய்து முடித்தபின், அப்புறம் பிரகாஷின் மீதிப் பணத்தைக் கொடுத்தார்.

பிரகாஷ் வேறு எதுவும் பேசவில்லை.

ஒரே ஒரு வார்த்தை கேட்டான்.

இந்த பணக்காரர்களை உங்களுக்கு தெரியுமா? என்று வியாபாரியிடம் கேட்டான்.

தெரியாது என்று சொன்னார் அந்த வியாபாரி.

என்னைத் தெரியுமா? என்று கேட்டான்.

உங்களத் தான் வருஷம் முழுதும் பாக்குறேன் தெரியும் என்று சொன்னார் வியாபாரி.

அப்புறம் ஏன் என்னை நிக்க வச்சுட்டு அவங்களுக்கு வியாபாரம் பண்ணீங்க? என்று கேட்க

நீங்க தெரிஞ்சவரு என்று ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார் வியாபாரி.

தவறு . என்ன இன்னிக்கி அவங்க உங்ககிட்ட நூறு ரூபாயைக் கூட வியாபாரம் பண்ணி இருக்கலாம். உங்களுக்கு லாபம் கிடைத்து இருக்கலாம். ஆனா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்க வராங்க. நாளைக்கு வர மாட்டாங்க. நான் ஒவ்வொரு நாளும் உங்ககிட்ட வாழைப்பழ வாங்குறவன். நீங்க தினமும் சம்பாதிக்கிறீக. தினந்தோறும் உங்களுக்கும் எனக்கும் வியாபாரம் நடக்குது.

ஆனா இன்னைக்கி வந்த பணக்காரரைப் பார்த்ததும் நீங்க போயிட்டீங்க. எனக்கு மீதி பணத்தை தராம நிக்க வச்சிட்டீங்க. இது தவறு தானே எப்பவும் நம்மள சார்ந்து இருக்கவங்கள நம்ம அரவணைத்துக்கிரனும் நம்ம கூட இருக்கவங்களுக்குத்தான் முதல்ல மரியாதை கொடுக்கனும். இன்னிக்கி என்ன நிக்க வச்சது – உங்க தப்பு என்று பிரகாஷ் சொன்னான்.

அந்த வாழைப் பழ வியாபாரியின் கன்னத்தில் பளார் பளார் என அறைவது போலிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *