லண்டன், ஜூலை.15-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் ஏறக்குறைய 5 மணி நேரம் போராடி பெடரரை வீழ்த்தி பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த 2 வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. பெண்கள் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரும், 8 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) பலப்பரீட்சை நடத்தினர்.
இரு வலிமையான வீரர்கள் மோதியதால் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் செட்டில் இருவரும் தங்களது சர்வீஸ்களை மட்டுமே புள்ளிகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தினர். இதனால் 6-6 என்று சமநிலை நீடிக்க அதன் பிறகு டைபிரேக்கரில் முதல் செட் ஜோகோவிச் பக்கம் சென்றது. அடுத்த செட்டில் பெடரர் பதிலடி கொடுத்தார். 3-வது செட்டை ஜோகோவிச் மீண்டும் டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்த, 4-வது செட் பெடரருக்கு உரியதானது.
இதனால் ஆட்டம் 5-வது செட்டுக்கு நகர்ந்தது. இதன் 6-வது கேமில் பெடரரின் சர்வீசை ஜோகோவிச் முறியடித்ததால் 4–2 என்று முன்னிலை வகித்தார். உடனே சுதாரித்துக்கொண்ட பெடரர் அவரது சர்வீசை தகர்த்து 4–4 என்று சமனுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து இருவரும் நீயா-நானா? போட்டி போட்டிக்கொண்டு விளையாடினார்கள். இறுதியில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
4 மணி 55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7–6 (7–5), 1–6, 7–6 (7–4), 4-6, 13-12 (7–3) என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் விம்பிள்டனில் சாம்பியன் ஆவது இது 5-வது முறையாகும்.
ஏற்கனவே 2011, 2015, 2015, 2018-ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று உள்ளார். அவருக்கு ரூ.20½ கோடியும், பெடரருக்கு ரூ.10¼ கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தத்தில் ஜோகோவிச் கைப்பற்றிய 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.