சிறுகதை

விமோசனம் (ப.முகமதுஜமிலுதீன்)

அந்த பெரிய வீட்டில் தாய் தெய்வநாயகி மட்டும் தனிமையில் இருந்தாள்.
எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் படித்த மூத்த மகள் சுதா ஐ.ஏ.எஸ்.சுக்கான பயிற்சி பெற மையத்திற்கு சென்றிருந்தாள். நூறு மீட்டர் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போன்றவற்றில் அகில இந்திய அளவில் விருதுகள் பெற்ற விளையாட்டு வீராங்கனை அவள். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இந்த விருதுகள் உதவும் என்று நம்பினாள். பத்தாவது படிக்கும் மகன் யுவனும் +2 படிக்கும் மகள் கீதாவும் பள்ளிக்கூடம் சென்றிருந்தனர். கணவன் சபேசன்; வழக்கத்திற்கு மாறாக வெகுசீக்கிரமாகவே கடைக்கு சென்றுவிட்டார்.
அப்படிப் போனவர் திடீரென வீட்டிற்கு திரும்பினார். முகத்தில் அடர்த்தியான சோகம். இதுவரை தெய்வநாயகி கண்டிராத முகம் அது. “ஏங்க திடீர்னு வந்துட்டீங்க” என்று படபடப்புடன் கேட்ட மனைவிக்கு பதில் சொல்லாமல், “அடுத்த தெருவில் இருக்கும் முருகேசனிடம் நான் அவசரமா இருபதாயிரம் கேட்டதாக சொல்லி வாங்கிக்கிட்டு வா. அவன் எனக்கு தர வேண்டிய பணம் அது” என்றதோடு நில்லாமல் “இனிமேல் யாருமே என் பார்ட்னரோடு தொடர்பு வைக்க வேண்டாம். அவனைப் பற்றி எதுவும் பேசவும் வேண்டாம்” என்றார் கண்டிப்புடன். மனைவி குழப்பத்துடன் புறப்பட்டாள்.
பணத்தோடு அவள் வந்தபோது வாயில் நுரை தள்ளியவாறு சோபாவில் சாய்ந்து கிடந்தார் சபேசன். அதை பார்த்ததும் நாலு வீடுகள் கேட்கும் மாதிரி “வீல்” என்று அலறினாள் தெய்வநாயகி. பின் ஓட்டமும் வேகநடையும் கண்ணீருமாய் “நலம்” என்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விவரத்தை சொன்னாள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஆம்புலன்சில் சபேசன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மூச்சு இருந்தது. ஆனால் பேச்சில்லை. மூத்த டாக்டர் அவரை பரிசோதித்த போது மூச்சும் நின்று விட்டது. அவசர சிகிச்சை என்று பத்தாயிரம் ரூபாய் தெய்வநாயகியிடமிருந்து பெற்றுக் கொண்டு தற்கொலை என்று போலீசுக்கு தெரியபடுத்திவிட்டார் அந்த மூத்த டாக்டர் முத்துரெங்கன்.
வீட்டிற்கு வந்த சபேசனின் உடலைக் கண்டு மனைவியும் பிள்ளைகளும் எப்படி துடிதுடித்து, கதறிக் கதறி அழுதார்கள்.
சபேசனும் கதிரேசனும் சேர்ந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு மின்சாதன அங்காடியை மாநகரின் மையப்பகுதியில் ஆரம்பித்தார்கள்.
எதிர்பார்த்ததைவிட பலமடங்கு விற்பனையானதால் இருவரிடமும் பணம் குவிந்தது. ஒரே நேரத்தில் இருவரும் புறநகர் பகுதியில் பங்களாவும் சொகுசு காரும் வாங்கினார்கள். கூட்டு பங்காண்மை தர்மத்தை இருவரும் முறையாக கடைபிடித்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் மாரடைப்பால் கதிரேசன் காலமானார். இதனால் அவரின் ஒரே மகன் ஜெகன் பார்ட்னராக மாறினான்.
தங்கள் கடைக்கு எதிரேயுள்ள ஜெகஜோதி ஜூவலரீஸ் விற்பனைக்கு வந்ததால் அதை இப்போதைய பார்ட்னர் முறையிலேயே வாங்க வேண்டும் என்று ஜெகன் பிடிவாதம் பிடித்தான். “கோடிக்கணக்கான பணத்திற்கு எங்கே போவது” என்று சபேசன் கேள்வி எழுப்பிய போது, கார், பங்களா, வீட்டு நகைகளை எல்லாம் இருவரும் விற்றால் அதற்கான பணம் சேர்ந்து விடும் என்று கூறியதோடு நில்லாமல், ஜெகன் அதை செயல்படுத்தும் வேலையிலும் இறங்கிவிட்டான். பார்ட்னர்களான இருவர்களின் சாவிகளால் திறக்கும் இரும்பு பெட்டியில் அவனின் சொத்துக்களை விற்று வந்த பணத்தை இவர் முன்னிலையில் அதில் வைத்தான்.
அதனால் சபேசனும் ஜெகன் செய்தபடியே செய்ய வேண்டியதாயிற்று.
ஆவலோடு கடைக்கு சபேசன் போன போது அங்கே ஜெகன் இல்லை.
மாறாக அந்த பகுதியின் மிக பயங்கரமான ரௌடி கோதுமை குருசாமி நின்றிருந்தான். காசுக்காக கொலை செய்யும் தொழில் செய்பவன் அவன். இவரை கோபத்துடன் பார்த்த குருசாமி. “இந்தாயா சபேசா, ஜோதி ஜூவல்லரின் நகைக்கடையை தன் பேருக்கு பதிவு செய்ய முதலாளி ஜெகன் போயிட்டார். இனிமே நீ இந்த கடைக்கும் பார்ட்னர் கிடையாது” என்றன்.
கோதுமை குருசாமி பயங்கரமா பயமுறுத்தியதோடு அவரின் பையிலிருந்த இரும்புப் பெட்டி சாவியையும் எடுத்துக் கொண்டான். மறுவார்த்தை பேசாமல் வீட்டிற்கு திரும்பினார் சபேசன்.
வர்ற வழியிலே மூன்று பாக்கெட் எலி பாஷாணம் வாங்கி, மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, விஷத்தை தண்ணீரில் கலக்கி குடித்துவிட்டார்.
வீட்டிலே மனைவியிடம் பணம் இல்லாததால், தன் இறுதி காரியங்களுக்காகத்தான் இருபதாயிரம் பணம் வாங்கி வர மனைவியை அவர் அனுப்பியது பின் தெரிய வந்தது.
அபாயகரமான கட்டத்தில் தன் குடும்பம் இருப்பதை மூத்த மகள் சுதா உணர்ந்தாள். ஆனால் அஞ்சவில்லை. துணிச்சல் மிகுந்தவள் அவள். தன் குடும்பத்தை கரை சேர்க்கும் வழிகளை தீவிரமாக ஆராய்ந்தாள். தான் வேலைக்கு போகலாம். ஆனால் வேலை உடனே கிடைக்க வேண்டுமே! அதைத் தவிர வேறு வழிகளைப் பற்றி யோசிக்கும்போது அவள் தந்தை இப்போது இவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு நான்கு லட்சம் அட்வான்ஸ் கொடுத்தது நினைவுக்கு வந்தது.
வாடகை ஒப்பந்தப் பத்திரம் வாங்கிக் கொண்டுதானே தந்தை அட்வான்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என்ற நினைவு வந்ததும் அங்குமிங்கும் தேடி வாடகை ஒப்பந்தப்பத்திரத்தை எடுத்துவிட்டாள் சுதா. அதைப் படித்துப் பார்த்ததும் நான்கு லட்சம் தன் கைக்கு புதையல் கிடைத்தது போல் உணர்ந்தாள்.
இந்தப் பணம் வந்துவிட்டது. இனிமேல் அவள் குடும்பத்திற்கு பணப் பிரச்சனை வராதே!
வாடகை குறைந்த சிறு வீட்டுக்கு மாறினாள்., ஒரு கடையை வாடகைக்கு பிடித்து ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் டைப்பிங், செல்போன் கட்டண ரீசார்ஜ், இ.பி. பில் கட்டுவது போன்ற பலவகை கட்டண சேவைகள் செய்தாள் ஓரளவு வருமானம் வந்தது.
இந்த சூழ்நிலையில்….
மகள் சுதா. போராடி வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற உறுதி அவளுக்கு எப்போதும் உண்டு. விளையாட்டு வீராங்கனை அல்லவா? செல்போனால் தான் உலகம் சிறிதாகிப் போனதே தவிர, வாழ்க்கையில் சாதிப்பதற்கு உலகம் எப்போதும் ஒரே மாதிரி பெரிதாகத்தான் உள்ளது என்ற கருத்து கொண்டவள் அவள்.
தன் தாயை அழைத்தாள்.
“அம்மா ….நான் வீடுகள்லே வேலைக்காரியா போகலாம்னு நினைக்கிறேன்” என்றதும் தாய் தெய்வநாயகியின் கண்களில் நீர் கோர்த்தது.
பின் சுதாவைப் பரிவோடு பார்த்து, “சுதா நீ ஐ.ஏ.எஸ். தேறி பெரிய வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டவள். அயோக்கியனான ஜெகனின் துரோகத்தால் நீ வேலைக்காரியா போயிர்றேன்னு சொல்றே. வேணாம்மா, வேணாம். நான் வேலைக்காரியா போறேன். எனக்கு வீட்டு வேலை பழக்கமானதுதான். நீ எங்கே தடுப்பியோன்னு தான், இத்தனை நாளா இதை ஓண்ட்டே சொல்ல தயங்கிட்டே இருந்தேன்” என்றதும் சுதா “அம்மா வேலைக்காரியாக போக முடிவு செய்றது பெரிய விஷயமில்லே. ஆனால் அதுக்காக வீடு வீடா, ஏறி இறங்கி உங்களுக்கு வேலைக்காரி வேணுமான்னு கேட்கமுடியுமா”
நான் இப்போ வீட்டுக்கு வர்ற வழியிலே ஒரு கட்டிடத்தின் முன்னாலே “பெண்கள் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சேவைகள் சங்கம்”ன்ற போர்டை பார்த்தேன். நாம ரெண்டு பேரும் இப்பவே அங்கே போவோம். வழி பிறக்கும்” என்று கூறியவாறு தாயை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.
அந்த சங்கத்தினர் பெண்களை வீட்டு பணியாளர்களாக அமர்த்துவதோடு நின்று விடுவதில்லை. அவர்களின் படிப்பு தகுதிக்கேற்ற வேலைகளையும் ஏழைப் பெண்களுக்கு கிடைக்கச் செய்கின்றனர்.
சமூக ஆர்வலர்களால் அந்த சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. இவர்களால் வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களுக்கு ஏதாவது தொல்லை வந்தால் செல் மூலம் இந்த நிறுவனத்திற்கு தெரிவித்தால் போதும். மின்னலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமவெறியர்கள் சிறைக்கு செல்கிறார்கள்.
தாய் தெய்வநாயகியின் பெயர் வீட்டுப்பணிப்பெண் வேலைக்கு அங்கே பதிவு செய்யப்பட்டது.
சுதாவின் பெயர் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர் பதவிக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குள் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற உறுதியும் தரப்பட்டது. தினமும் செல் மூலம் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கப்பட்டது. சுதாவின் செல் நம்பரையும் நிர்வாகிகள் வாங்கிக் கொண்டார்கள்.
வேலை கிடைத்ததும் சம்பள அட்வான்சாக பணமும் பெற்று தரப்படும் என்று அந்த சங்க நிர்வாகிகள் கூறியதுதான் சுதாவை மிகவும் ஆறுதல் படுத்தியது. ஒரு ஓட்டு சாப்பு சிறு வீட்டிற்கு இவர்கள் செல்ல அட்வான்ஸ் கொடுக்க அது உதவுமல்லவா!
இந்த சில நம்பிக்கையூட்டும் விவரங்களோடு அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபின் மூன்று நாட்கள் கழிந்தன.
திடீரென ஒரு போன் அந்த பணியாளர் சங்கத்திலிருந்து சுதாவிற்கு வந்தது.
அப்போது….
சிவந்த மேனி, பிரகாசமான முகம், கொண்ட ஓர் உயரமான பெண் காரிலிருந்து கம்பீரமாக இறங்கினாள்.
வேக நடையில் வந்து இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாள். கையில் ஒரு கனத்த பையும் வைத்திருந்தாள். யார் இவள்? இங்கு ஏன் வருகிறாள்? என்று குழப்பத்துடன் அவளை பார்த்த சதாவின் தோளின் மேல் பாசத்துடன் கையை வைத்த அந்த பெண், “கொஞ்ச நாள் முன்னாலே அட்வான்ஸ் நாலு லட்சம் சம்பந்தமா என் வீட்டுக்கு நீ வந்தப்போ உன்னை ஜன்னல் வழியாய் நான் பார்த்தேன். என் வீட்டுக்காரர் பத்திரத்தை கிழிச்செறிஞ்ச கொடுமையையும் பார்த்தேன். அவர் செஞ்சது பெரிய துரோகம். அந்த பாவத்தை போக்கத்தான் நான் இப்போ இங்கே வந்திருக்கேன். நான் அப்பவே, ஏன் வரலோன்னா, அந்த மனுஷன் அதையே சாக்கா வச்சு, ஓவரா குடிச்சிட்டு வந்து ஆடுவார். என்னை அடிக்கவும் செய்வார்” என்றாள்.
“உங்க முகங்களை பார்க்கும்போது நீங்க சந்தேகப்பட்ற மாதிரி தெரியுது” என்று கூறியவாறு தன் கையிலிருந்த வெள்ளைப் பையிலிருந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்துக் காண்பித்து பின் அந்தப் பையை சுதாவிடம் கொடுத்தாள். “என் வீட்டுக்காரருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலே ஸ்ட்ரோக்கு வந்து கைகால் விழங்காம படுத்த படுக்கையாயிட்டார். பேச்சும் வரலே. டாக்டர்கள் வந்து பார்த்து, ‘இவர் தேறவே மாட்டார்னு’ சொல்லிட்டு போயிட்டாங்க”.
“அடப்பாவமே” என்று தெய்வநாயகி பரிதாபப்பட்டபோது அந்தப் பெண், “நாமென்னமா செய்யமுடியும். அளவுக்கு மீறி குடிச்சார். இப்போ சிறுநீரும் மலமுமா அசிங்கப்பட்டு கிடக்கிறார். கடவுள் நாம் செஞ்ச பாவங்களை மன்னிக்கலாம். ஆனால் நம் உடலின் நரம்பு மண்டலம் மன்னிக்காது. சரி. அதை விடுங்க. இந்த வீட்டை காலி செய்யச் சொல்லி யாரும் வரமாட்டாங்க. இது என் வீடு. சும்மா பந்தாவுக்கு என் வீட்டுக்காரர் அவர் பெயரை வாடகைப் பத்திரத்துலே போட்டுக்கிட்டார். இந்த பெரிய வீட்டை மூணுபாகமா பிரிக்கப் போறேன். அதுலே ஒரு வீட்லே நீங்க இருந்துக்குங்க. வாடகையே தரவேணாம்” என்று கூறியவாறு அப்பெண் விருட்டென திரும்பி தான் வந்த காரை நோக்கி நடந்தாள். சுதாவிற்கு அவள் பெண்ணாக தெரியவில்லை. தேவதையாகத் தெரிந்தாள்.
இதே நேரம் டி.வி.செய்தி சேனல்களில் “ஜெகஜோதி ஜூவல்லர்ஸ் கடையில் போலீஸ் ரெய்டு. வழிப்பறி தங்க நகைகளை உரிமையாளர் ஜெகன் என்பவர் நிறைய வாங்கியது தெரிந்ததால் கைது. நகைக்கடைக்கு சீல்” என்ற செய்தி போய்க் கொண்டிருந்தது.
போலீஸ் வஞ்சகன் ஜெகனை முட்டிக்கு முட்டி தட்டினர்.அப்போது சபேசனுக்கு அவன் செய்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்தது.
சுதாவும் தெய்வநாயகியும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *