புதுடெல்லி, அக். 8–
இன்று இந்திய விமானப்படை நாளையொட்டி பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப்பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 8-–ந்தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகள். வீரத்துக்கும் தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது. நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய விமானப்படையின் வீரர், வீராங்கனைகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்களுடைய ஒப்பில்லா அர்ப்பணிப்பு, நமது வான்பரப்புகளை பாதுகாக்கிறது. உங்களுடைய தன்னலமற்ற சேவைக்கும் தியாகங்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.ஜெய்ஹிந்த் எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.