செய்திகள்

விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூரில் கைது

பெங்களூர், ஜன. 7–

விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் தொடர்பாக ஏர் இந்தியா ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டதால், அது குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறு நீர் கழித்த போதை ஆசாமி பெயர் சங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.இந்த நிலையில் அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த டெல்லி போலீசார் சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர்.

அவர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்திருந்தாலும் கூட சமூக வலைதளங்கள் மூலம் அவரது நண்பர்களை தொடர்பு கொண்ட நிலையில் போலீசார் அதனைவைத்து அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் இன்று பாட்டிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த நவம்பர் 26–ம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் 72 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே ஏர் இந்தியா விமானத்தில் 32 வயது நபர் ஒருவரும் பயணித்தார். அந்தப் பயணி 72 வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண், “பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்து தான் சுதாரிப்பதற்குள் அங்கே சிறுநீர் கழித்தார். அதன் பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். என் உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர். நான் எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரை இறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் மெத்தனமாக இருந்துவிட்டனர் என்று டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அந்த நபர் 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது.

வேலை நீக்கம்

இதனிடையே, விமானத்தில் சிறுநீர் கழித்த நபரை அவர் வேலை பார்த்துவந்த அமெரிக்க நிதி சேவை நிறுவனமான ‘வெல்ஸ் போர்கோ’ பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், இது தங்களின் நிறுவனத்துக்கு பெரும் அவமானம் என்றும் சங்கர் மிஸ்ராவின் செயலை கடுமையாக சாடியுள்ளது அந்நிறுவனம்.

போலியான வழக்கு

இந்நிலையில் சங்கர் மிஸ்ராவின் தந்தை ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இது முற்றிலும் போலியான வழக்கு. பயண நாளில் என் மகன் மிகவும் சோர்வாக இருந்துள்ளான். அதற்கு முன்னதாக 30 மணி நேரம் தூங்கவில்லை. விமானத்தில் அன்று மது அருந்தியுள்ளான். உணவுக்குப் பின்னர் ஆழ்ந்து தூங்கிவிட்டதாக சொன்னான். அவன் தூங்கி எழுந்த பின்னர் விமான நிறுவன ஊழியர்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை அவன் அப்படி நடந்திருக்க மாட்டான். என் மகனுக்கு 34 வயது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 72 வயது. அவ்வளவு வயதான பெண்ணிடம் என் மகன் அப்படி அநாகரிகமாக நடந்திருக்க வாய்ப்பில்லை. என் மகனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அப்படியிருக்க அவன் இவ்வாறு நடந்திருக்க இயலாது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் என் மகனிடம் ஏதோ பணம் கேட்டு பேரம் பேசப்பட்டுள்ளது. அதனை அவன் கொடுத்துள்ளான். மீண்டும் ஏதோ கேட்கப்பட அவன் அதை கொடுக்காத நிலையிலேயே இந்த குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

சங்கர் மிஸ்ராவை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்றிரவு அவரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *