புதுடெல்லி, டிச. 18–
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது.
ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் 14ம் தேதி வரை 999 வெடிகுண்டு மிரட்டல்கள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அக்டோபரில் மட்டுமே 666 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது.
இதுபோன்ற மிரட்டல்கள் விமான நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது பயணிகளுக்கு பெரும் தலைவலியாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.
ஒரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் அது அந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிகிறது. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் படி ரூ.1.லட்சம், ரூ.50 லட்சம் என ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.