செய்திகள்

விமர்சனத்தைத் தொடர்ந்து மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம்

போக்குவரத்துத் துறை நடவடிக்கை

சென்னைஆக.12–

விமர்சனத்தை தொடர்ந்து மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.

மாநகர பஸ்கள் அனைத்தும் ஒரே நிறத்தில் இயங்கியதால் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் இருந்து சாதாரண பஸ்களை அடையாளம் காண்பதில் பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களுக்கு ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இலவச பஸ்களில் முன்புறமும், பின்புறமும் ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டது. மீதமுள்ள இரு பக்கவாட்டு இடங்களும் செலவு கட்டுப்பாடுகள் காரணமாக அப்படியே விடப்பட்டன.

50 பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்களை சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6–ந்தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. மேலும் பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதையடுத்து மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் செய்ய, வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத்துறை தொடங்கி உள்ளது.

இருபுறமும் பக்கவாட்டில் பிங்க் நிறத்துடன் ஒரே மாதிரியாக தோன்றும் வகையில் விளம்பரத்துக்கு வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது. மாநகர பஸ்களின் பக்கவாட்டு பகுதியில் நிறுவனங்கள் வாடகை செலுத்தி விளம்பரம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.